என் மலர்
சினிமா செய்திகள்

சரோஜா தேவி மறைவு - எண்ணற்ற காவியங்களில் கதாநாயகியாக கோலோச்சியவர், விண்ணுக்கு பறந்த கன்னடத்து பைங்கிளி!
- தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகில் சுமார் 167-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இப்போ இருக்குற 2 கே கிட்ஸ்-க்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாராவை தான் கூறுவார்கள். ஆனால் 1960 காலக்கட்டங்களில் தி ஒரிஜினல் OG லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகை சரோஜாதேவி தான். சுமார் 30 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகை ஆண்ட இந்த நடிகை சரோஜா தேவி யார்?
தமிழ் திரை உலகில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் சரோஜா தேவி (87). தன் நடிப்பாலும், உடல் அசைவுகளாலும், நலினத்தாலும் ஒட்டு மொத்த தென்னிந்திய திரை உலகத்தையே கட்டுப் போட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிக்கரமாக பயணித்து வந்தார். அவரது நடை, உடை, முகபாவனைகள், சிகை அலங்காரங்கள், நடிப்பு ஆகிய அனைத்தும் திரை உலக ரசிகர்களை மிகவும் கவர்ந்து வந்தது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகில் சுமார் 167-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1955-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை சரோஜா தேவி.
சிறுவயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்த சரோஜாதேவியை நடிக்க ஊக்குவித்தவர் அவரது அப்பா பைரப்பாதான். 13 வயதிலேயே சரோஜாதேவிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது அதனை மறுத்துவிட்ட அவர், 1955ம் ஆண்டு தனது 17 வயதில் 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
தமிழ் திரையுலகில் பல கதாநாயகிகள் வந்து சென்றாலும், சரோஜா தேவியின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இவர் கொஞ்சி பேசும் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இக்காலக்கட்டத்தில் கதாநாயகிகள் வைரல் அல்லது புகழடைய வேண்டுமென்றால் ஒரு படத்தில் அல்லது ஒரு பாடலில் கவர்ச்சி உடையணிந்து பார்வையாளர்களை கவர்ந்து சினிமா மார்க்கெட்டில் அவர்களை தக்க வைத்துக் கொள்கின்றனர் ஆனால் எந்த வித நீச்சல் ஆடை அணியாமல் கவர்ச்சி உடை அணியாமல் முன்னணி அந்தஸ்துடைய கதாநாயகியாக சரோஜா தேவி திகழ்ந்தார்.
எம்.ஜி ஆர் உடன் 26 படங்களிலும். சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 50 ஆண்டு திரைப்பயணத்தில் 2000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1990-ம் ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார். 1997-ல் வெளிவந்த ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யா நடித்த ஆதவன் படம் தான் இவர் கடைசியாக நடித்த தமிழ் படம். பல ஆண்டுகளாக பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகளாக சரோஜா தேவி உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இன்று காலை காலமானார்.
தமிழ் திரை உலக ரசிகர்கள் மனதில் இன்றும் அபிநய சரஸ்வதியாக வாழ்ந்து வந்த சரோஜா தேவியின் மரணம் திரை உலகை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.






