என் மலர்
சினிமா செய்திகள்

பரிசு- திரை விமர்சனம்
- கடத்தல் கும்பலிடம் இருந்து ஜான்விகா தப்பித்தாரா?
- ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறியதா?
பொறியியல் கல்லூரியில் படித்து வரும் நாயகி ஜான்விகா, படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமாக இருக்கிறார். இவரை கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஆனால் ஜான்விகா எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறார்.
விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறார். முறையான பயிற்சிக்குப் பின் குறிபார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொண்டு ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.
தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கார் மீது லாரி மோதிவிட்டு தப்பிச்செல்லும் விபத்தை ஜான்விகா பார்க்கிறார். காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறார். இதனால் கோபமடையும் குற்றவாளியின் கும்பல் ஜான்விகாவை கடத்துகிறார்கள்.
இறுதியில் கடத்தல் கும்பலிடம் இருந்து ஜான்விகா தப்பித்தாரா? ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா கல்லூரி மாணவியாகவும் பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்து இருக்கிறார். தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாக மனதில் பதிந்து இருக்கிறார். படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள் சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன்,
அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக கவர்ந்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு பெண் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கலா அல்லூரி. பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்பது அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
தனது மகளை ராணுவத்தில் சேர்க்க விரும்பும் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஒரு மகளின் கதை தான் இந்த படம். அந்தப் பரிசை கொடுக்க கதாநாயகி படும் சவால்களும் சோதனைகளும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். படத்தில் லாஜிக் மீறல்கள் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். காமெடி நடிகர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
இசை
ராஜீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஹமராவின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவுவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.






