என் மலர்
சினிமா செய்திகள்

காந்தாரா-2 பட நடிகர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- ‘காந்தாரா-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலோர பகுதிகளில் நடந்து வருகிறது.
- கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி அவரே நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலோர பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூர் பகுதியில் 'காந்தாரா-2' படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் துணை நடிகராக கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கபில்(வயது 32) என்பவர் நடித்து வந்தார்.
நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்து கபில் தனது நண்பர்களுடன் அருகே உள்ள சவுபர்ணிகா ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது கபில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் கபிலை காப்பாற்ற சென்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள், கொல்லூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் படகு மூலம் சென்று கபிலின் உடலை தேடி மீட்டனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'காந்தாரா-2' படத்தில் நடித்து வரும் துணை நடிகர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் படக்குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






