என் மலர்
சினிமா செய்திகள்

ஜப்பானில் பிரபாஸ் பாதுகாப்பாக உள்ளார்: இயக்குநரின் டுவிட்டால் ரசிகர்கள் நிம்மதி
- பாகுபலி: தி எபிக் திரைப்படம் வரும் 12-ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
- வரலாற்று கதைக்களத்துடன் உருவான இப்படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
புதுடெல்லி:
நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் கோடிகளில் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றன. இத்துடன், வரலாற்று கதைக்களத்துடன் உருவான இந்தப் படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
இதையடுத்து, இவ்விரண்டு திரைப்படங்களையும் இணைத்து 'பாகுபலி: தி எபிக்' எனும் முழு நீளப் படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். 'பாகுபலி: தி எபிக்' படம் வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்ட 'பாகுபலி: தி எபிக்' படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதற்கிடையே, ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் இருக்கும் பிரபாசின் நிலைமை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தான் டோக்கியோவில் இல்லை என்றும் பாதுகாப்புடன் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார் என இயக்குனர் மாருதி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பிரபாசின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.






