என் மலர்
சினிமா

பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு - சிவகுமார்
பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என்று நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Sivakumar #Sabarimala
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.
இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர்.
பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது.
இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்’.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story






