search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில் மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் - விஜய்சேதுபதி
    X

    பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில் மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் - விஜய்சேதுபதி

    பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில், மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். #VijaySethupathi #Junga
    விஜய்சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இந்த படத்தின் வெளியீட்டையொட்டி அவர் அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஜுங்கா படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்கியது ஏன்?

    பதில்:- நடிகர்களின் வியாபாரத்தை பொறுத்தவரை சில வரைமுறைகள் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த வரைமுறை கணக்கில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பல மர்மங்கள் நிறைந்த அலிபாபா குகை போல சினிமா வியாபாரம் மற்றும் வசூல் கணக்கு மாறிவிட்டது.

    ஒரு நல்ல கதையை வியாபாரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஆகும் செலவை சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எந்த சூழ்நிலையிலும் உங்கள் பட்ஜெட்டை இறக்காதீர்கள் என்று அச்சப்படுத்துகிறார்கள். மார்க்கெட் என்ற பெயரில் கதாநாயகர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

    அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படம் என்ன கேட்கிறதோ அதை செலவழித்து படம் எடுத்து வியாபாரம் செய்வதே சரியானதாக இருக்கும்.

    மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்றும் கட்டம் கட்டுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

    என்னுடைய நிறைய படங்கள் சினிமாக்காரர்களால் ஏளனமாக பார்க்கப்பட்டவை. ஆனால் மக்கள் வரவேற்பை பெற்றவை. எனக்கு இயக்குனர் கோகுல் மீது இருந்த நம்பிக்கையே ஜுங்காவின் பிரம்மாண்டத்துக்கு காரணம்.

    எல்லா நடிகர்களுக்கும் எல்லா வகை படங்களும் பண்ண விருப்பம் இருக்கும். ஆனால் வியாபார பயம் தான் அவர்களை யோசிக்க வைக்கிறது. சினிமாவை எல்லாருமே நேசித்து தான் வருகிறார்கள்.

    வரைமுறை எதுவும் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என்பதற்கு உதாரணம் பாகுபலி. வாய்வழி விளம்பரம் தான் இங்கே முக்கியம். மக்களுக்கு பிடித்தால் போதும்.



    கே:- நடிகர்களின் சம்பளம் அதிகமாகி விட்டதாக ஒரு குறை சொல்லப்படுகிறதே?

    ப:- எல்லாமே இங்கே டிமாண்டை பொறுத்து தான். உங்களுக்கான மார்க்கெட் தேவை இல்லாவிட்டால் ஒரு ரூபாய் அதிகமாக கேட்டால் கூட கொடுக்க மாட்டார்கள். நான் சினிமாவுக்கு வெளியில் இருந்தபோது அப்படிதான் தெரிந்தது. ஆனால் உள்ளே வந்தபிறகு தான் கதாநாயகர்களின் சம்பளம் அவர்கள் நிர்ணயித்துக் கொள்வதில்லை. அது மற்றவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது புரிகிறது.

    கே:- ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்?

    ப:- ரஜினியை ஒரு பல்கலைக்கழகமாக பார்க்கிறேன். அந்த பல்கலைக்கழகத்தில் மாணவனாக கற்றுக்கொள்ள ஆவலோடு இருக்கிறேன். அவரிடம் வீழ்ந்தாலும் எனக்கு பெருமையே. நான் சம்பாதித்தது போதும். நிறைவான வேடங்களில் நடிக்க தான் விரும்புகிறேன்.

    அது வில்லனாக இருந்தாலும் சரி, சில நிமிடங்கள் வந்தாலும் சரி. எனக்கு பிரச்சினை இல்லை.

    கே:- விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எழும் எதிர்ப்புகள்?

    ப:-என் தந்தைக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. சண்டை போட்டு, கண்டித்து, பிடிவாதமாக இருந்து, பேசாமல் இருந்து அதை நிறுத்த வைத்தேன். ஆனால் எனக்கும் அதே பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் புகைபிடிக்காதே என்றார். பின்னர் நிறுத்தினேன்.

    என் உடனேயே வாழ்ந்து புகையால் இறந்த ஒருவர் சொல்லியே என்னால் கடைபிடிக்க முடியவில்லை. புகை தீங்கானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சினிமாவால் தான் புகை பழக்கம் அதிகமாகிறது என்பதில் உடன்பாடு இல்லை.



    ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும்போது அது தேவைப்பட்டால் தவிர்க்க முடியாதே... அப்படி பார்த்தால் வில்லன் என்ற கதாபாத்திரமே இல்லாமல் தான் சினிமா எடுக்க வேண்டும்.

    கே:- தமிழ்நாட்டுக்கு இப்போது ஒரு தலைமைக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. எப்படிப்பட்டவர் பூர்த்தி செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    ப :- மக்கள் இதுவரை தி.மு.க. அதிமுக இரண்டு ஆட்சிகளையும் மாறி மாறி பார்த்து இருக்கிறார்கள். முன்பு இதுபோன்ற பாதுகாப்பில்லாத சூழல் இல்லை. இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதுகாப்பில்லாத சூழல் தான் தலைமையை தேடுகிறது.

    அது சரியாகிவிடும் என்று நம்புகிறேன். இந்த கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது. மக்களிடத்தில் ஒரு எரிச்சல் இருக்கிறது. ஓட்டு போடும் நாள் வரும்போது மக்கள் இதற்கான பதிலை தருவார்கள்.

    ப:- நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது. இங்கு எல்லோரும் வரலாம். ஆனால் நான் வரமாட்டேன். எனக்கு அந்த அறிவு இல்லை. யார் வந்தாலும் சாதி அரசியலை ஒழிக்க வேண்டும். அதுதான் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். சாதி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VijaySethupathi #Junga

    Next Story
    ×