search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழிவாங்கப்படுகிறோம் - மன்சூர் அலிகான்
    X

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழிவாங்கப்படுகிறோம் - மன்சூர் அலிகான்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம் என்று கபிலவஸ்து பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
    சென்னை:

    பிளாட்பார மனிதர்கள் பற்றி உருவாகி இருக்கும் படம் கபிலவஸ்து. கொள்ளிடம் படத்தை இயக்கிய நேசம் முரளி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இயக்குனர் சங்கத்தில் நடந்தது.

    விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது கூறியதாவது:-

    நேற்று என் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தின் தடை இல்லை என்பதற்காக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சென்றேன்.

    மைலாப்பூரில் இருந்த விலங்குகள் நல வாரியத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே அரியானா மாநிலத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என தெரிய வந்தது. சினிமா என்றாலே சென்னை தான். இங்கே தான் ஆயிரக்கணக்கில் சினிமா எடுக்கப்படுகிறது.

    இங்கு இருந்து எப்படி வடமாநிலத்துக்கு கொண்டு செல்லலாம்? சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஒரு காட்சியில் காக்கா குறுக்கே வந்தால் கூட படத்தை எடுத்துக்கொண்டு அரியானா ஓட வேண்டும். இது அநியாயம் இல்லையா? இது எல்லாம் பழி வாங்கல் தானே...

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம். தமிழனைப் போல் விலங்கை நேசிப்பவர் யாரும் இல்லை. இதை எல்லாம் யார் கேட்பது? மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்.

    தூங்கிக் கொண்டிருக்கும் போது நம் வீடு நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த மாதிரியான ஆட்சியில் மாட்டிக் கொண்டுள்ளோம். நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இயக்குனர் நேசம் முரளி பேசும்போது ‘நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து தான் நான் படம் எடுத்து இருக்கிறேன். இந்த படம் பிளாட்பார மனிதர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கும்.

    அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஆதரவில் தான் அனாதை ஆசிரமங்கள் இயங்குகின்றன. ஆனால் ஆதரவற்ற பிளாட்பார வாசிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. எங்கு திரும்பினாலும் பிச்சைக்காரர்கள்.

    ஓட்டு வாங்க வரும் தலைவர்கள் அதன்பின்னர் ஒருநாள் கூட சுற்றுப்பயணம் வருவதில்லை. வெளி நாடுகளுக்கு தான் செல்கிறார்கள். வெளிநாட்டிலா நீங்கள் ஓட்டு வாங்கினீர்கள்?’ என்றார்.

    நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, ரமேஷ் கண்ணா இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×