search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் திலீப் விவகாரம்: மேலும் 14 நடிகைகள் ராஜினாமா மிரட்டல்
    X

    நடிகர் திலீப் விவகாரம்: மேலும் 14 நடிகைகள் ராஜினாமா மிரட்டல்

    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக 14 கேரள நடிகைகள் மிரட்டல் விடுத்துள்ளனர். #AMMA #MalayalamActorsAssociation #Dileep
    கேரளாவில் நடிகையை கடத்தி ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது புதிதாக நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததற்கு மலையாள நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 4 நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக மோகன் லால் அளித்துள்ள விளக்கத்தில் நடிகர்சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் பரிந்துரையின் பேரிலேயே திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி உள்ளார். அதேசமயம் தான் குற்றமற்றவன் என்பதை கோர்ட்டில் நிரூபித்த பிறகே நடிகர் சங்கத்தில் இணைய விரும்புவதாக திலீப் தெரிவித்தார். விரைவில் நடிகர் சங்க கூட்டம் கூட்டப்பட்டு திலீப் பிரச்சினை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.



    ஆனாலும் இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு தரப்பில் இருந்தும் மோகன்லாலுக்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகைகள் சம்யுக்தா, அமலா, ரஞ்சனி, சஜிதா உள்பட 14 நடிகைகள் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் பேஸ்-புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் ‘அம்மா’ என்றால் எல்லோரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். ஆனால் தற்போது நடிகர் சங்கம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை. நடிகர், நடிகைகளிடம் வேறுபாடு பார்க்கப்படுகிறது. நடிகைகளுக்கு எதிராக நடிகர் சங்கம் செயல்படுகிறது. எனவே நாங்கள் ‘அம்மா’வில் நீடிக்க விரும்பவில்லை. என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நடிகை ஊர்மிளா உண்ணி இந்த பிரச்சினை தொடர்பாக கூறும்போது, பாதிக்கப்பட்ட நடிகை சங்கத்தில் உறுப்பினராக இருக்கும்போது பிரச்சினைக்குரியவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது தவறு. இதில் யார் தூண்டுதல் உள்ளது என்பது விரைவில் தெரிய வரும் என்றார்.

    இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் சானு கூறும் போது, கேரளாவில் கல்லூரி, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடிகர், நடிகைகளை அழைக்கக்கூடாது. கல்வியுடன் தொடர்புடையவர்களையே விழாக்களுக்கு அழைக்க வேண்டும் என்றார். #AMMA #MalayalamActorsAssociation #Dileep

    Next Story
    ×