search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
    X

    தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

    தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகை கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் ரத்த காயத்தோடு இருக்கும் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது. 



    தூத்துக்குடியில் போலீசார் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை” என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.

    இதேபோல் நடிகை கார்த்திகா, “தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

    நீங்கள் உளவு துறையில் பணியாற்றுகிறீர்களா? துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா? தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவருக்கு பலர் பதிலடி கொடுத்து கண்டித்து வருகிறார்கள். #BanSterlite #SaveThoothukudi

    Next Story
    ×