என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜல்லிக்கட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் நமது ஒற்றுமையின் அடையாளம் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகமெங்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அமைதிப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை நேரில் சென்று தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், நேற்று நடிகரும், சமூக ஆர்வலருமான ஆர்.ஜே.பாலாஜி, போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்களை சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்தார். அப்போது, மாணவர்களிடையே அவர் பேசும்போது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவரவர் இருக்கும் இடங்களில் இந்தளவுக்கு அமைதியாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாது. யாரையும் அடிக்கவில்லை, பஸ் கண்ணாடியை உடைக்கவில்லை, யாரும் குடித்துவிட்டு இங்கு கலாட்டா பண்ணவில்லை. இருக்கிற ஒவ்வொரு இளைஞர்களும் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.  

    ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோட அடையாளம் என்றால், இப்போது நடந்து கொண்டிருக்கிற போராட்டம் நம்முடைய எல்லோருடைய ஒற்றுமையின் அடையாளம். இந்த ஒற்றுமை ஜல்லிக்கட்டை நடத்திவிட்டு அதோடு சென்றுவிடுவது கிடையாது. விவசாயி தற்கொலை என்றாலும் இதே கூட்டம்தான் வந்து போராடப் போகிறது. கல்லூரியில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் அதற்காக இந்த கூடடம் வந்து போராடவிருக்கிறது.

    இனிமேல் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. எங்களை ஏமாற்ற நினைத்தால் நாங்கள் போராடுவதற்கு ரோட்டிற்கு வருவோம். எங்களால மற்றவங்களை காப்பற்றுவதற்காக ரோட்டில் வந்து போராட முடியும். எங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் எங்களால் போராடமுடியும். அதனுடைய வெளிப்பாடுதான் இது.

    நான் தமிழன் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. அதேபோல், இந்தியன் என்பதிலும் பெருமை கொள்கிறேன். ஆனால், என்னுடைய தமிழ் என்கிற அடையாளத்தை அழிக்க நினைப்பதற்கு நான் ஒருபோதும் துணை நிற்க மாட்டேன் என்று பேசி முடித்தார்.

    ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்டுள்ள தடை சட்டத்தை நீதிமன்றம் உடனடியாக நீக்கவேண்டும் என்று சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிவகுமாரும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கேயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைபோல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மாடு பிடிக்கும் விளையாட்டு தமிழ் மண்ணில் நடந்து வருகிறது.

    ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில் மாட்டின் முதுகில் கத்திகளைச் சொருகி நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ்நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

    வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த ‘பீட்டா’ சட்டம். உண்மையிலேயே விலங்கினத்தை பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்பட்டதென்றால், ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி, இன்னமும் தினம் லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது என்ன? ‘கோமாதா நம் குல மாதா என்று பசுவை கும்பிடும் பாஜக அரசுக்கு இது தெரியாதா?

    பசுவதை சட்டம் இதற்குப் பொருந்தாதா? சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள். மக்கள் நலனுக்காகவே சட்டம். நீதிமன்றம் இதை புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்தை உடனே நீக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    தமிழ் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு நடிகர்கள் தனுஷ் மற்றும் விக்ரம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் தீவிரமாக போராட்டக் களத்தில் பங்கு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷ் மற்றும் விக்ரம் இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தனுஷ், ஜல்லிக்கட்டுக்காக இணைந்து போராடும் அனைத்து தமிழர்களால் பெருமை கொள்கிறேன். தமிழ் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை நடத்த ஒருங்கிணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் விக்ரம் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.
    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.

    "கல்யாணப்பரிசு'' படத்தை இயக்கி, புகழின் சிகரத்தைத் தொட்ட ஸ்ரீதர், "சித்ராலயா'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி "தேன் நிலவு'' படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். இதற்கு இசை அமைக்க ஏ.எம்.ராஜாவும், பாடல்கள் எழுத மருதகாசியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    இந்தப் படத்துக்காக, 3 பாடல்களையும் மருதகாசி எழுதிக் கொடுத்து விட்டார்.

    இதற்கிடையே சிவாஜி பிலிம்சின் இன்னொரு நிறுவனமான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில், "விடிவெள்ளி'' என்ற படம் தயாராகி வந்தது. சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தை ஸ்ரீதர்தான் டைரக்ட் செய்தார். இசை ஏ.எம்.ராஜா. பாடல்கள் மருதகாசி.

    இந்தப் படத்தில் மருதகாசி எழுதிய "கொடுத்துப்பார் பார் உண்மை அன்பை'' என்ற பாட்டு இடம் பெற்றது. அந்த பாட்டுக்கான மெட்டு அடிக்கடி மாற்றப்பட்டது. இதனால் பட அதிபர்களுக்கும், ஏ.எம்.ராஜாவுக்கும் உரசல் ஏற்பட்டது. இதில், மருதகாசியும் பங்கு கொள்ள நேரிட்டதால், ஏ.எம்.ராஜாவுக்கும், மருதகாசிக்கும் மோதல் ஏற்பட்டது. "இனி ஏ.எம்.ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார், மருதகாசி.

    டைரக்டர் ஸ்ரீதர், ஜெமினிகணேசன் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மருதகாசி தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

    இதன் காரணமாக, "தேன்நிலவு'' படத்தில் அவர் பணியாற்ற முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த 3 பாடல்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று மருதகாசி கூறிவிட்டார்.

    1956-ம் ஆண்டு, ஏ.பி.நாகராஜன் பட உலகில் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் ïனிட்டில் கே.சோமு (டைரக்ஷன்), கோபண்ணா (கேமரா), டி.விஜயரங்கம் (எடிட்டிங்), கே.வி.மகாதேவன் (இசை), மருதகாசி (பாடல்) ஆகியோர் இருந்தார்கள்.

    இந்த ïனிட் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, ஏ.பி.நாகராஜன் கதை- வசனத்தில் பல்வேறு கம்பெனிகளின் பெயர்களில் படங்கள் தயாரிக்கப்பட்டன.

    மருதகாசி, கே.வி.மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், "வயலின்'' மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட "எம்.எம்.புரொடக்ஷன்ஸ்'' என்ற படக்கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தக் கம்பெனி சார்பில் "அல்லி பெற்ற பிள்ளை'' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய "டாங்கா வாலா'' என்ற படத்தின் கதையை தழுவி, திரைக்கதை அமைக்கப்பட்டது.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். திரைக்கதை -வசனம் ஏ.பி.நாகராஜன். டைரக்ஷன் கே.சோமு. பாடல்களை மருதகாசி எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஒரு குதிரை முக்கிய கதாபாத்திரமாக நடித்தது. மருதகாசி மங்களூர் சென்று, ஒரு வெள்ளைக்குதிரையை வாங்கி வந்தார். குதிரையைப் பார்த்த சின்னப்ப தேவர், "குதிரைக்கு சுழி சரியில்லையே! விற்றுவிடுங்கள்'' என்றார்.

    ஆனால் திட்டமிட்டபடி, குதிரையை படத்தில் நடிக்க வைத்தார்.

    ஒரு குழந்தை தொட்டிலில் படுத்திருக்க, தொட்டில் கயிற்றை குதிரை தன் வாயினால் இழுத்து, குழந்தையை தூங்க வைக்கும். அப்போது குதிரையின் மன நிலையை விளக்கும் விதமாக, "எஜமான் பெற்ற செல்வமே'' என்ற பாடலை மருதகாசி எழுதினார். அவரும், கே.வி.மகாதேவனும் விரும்பிக் கேட்டுக்கொண்டதால், பாடலை பிரபல இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் பின்னணியில் பாடினார்.

    6 மாத காலத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்வதாக விநியோகஸ்தர்களுடன் படக்கம்பெனி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் படம் முடியவில்லை. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போயிற்று. கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே இருந்தன.

    பாடல் எழுதுவதில் மருதகாசி `பிசி'யாக இருந்த நேரம். ஆனால், அவருக்கு வேண்டாத சிலர், "மருதகாசி சொந்தப் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இனி வெளிப்படங்களுக்கு குறிப்பிட்ட நாளில் பாடல் எழுதித்தர மாட்டார்'' என்று பிரசாரம் செய்தனர்.

    இதனால் புதுப்பட வாய்ப்புகள் குறைந்தன.

    இரண்டு ஆண்டு காலம் தயாரிப்பில் இருந்த "அல்லி பெற்ற பிள்ளை'' 31-7-1959-ல் வெளிவந்தது. படம் ஓரளவு நன்றாக இருந்தும், தோல்வியைத் தழுவியது.

    மருதகாசியின் தம்பி அ.முத்தையன், கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். "மருதகாசியின் திரையுலகச் சாதனைகள்'' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

    மருதகாசியின் சொந்தப்பட அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "என் அண்ணன் ஒரே ஒரு படம் எடுத்தார். குசேலர் ஆனார்.

    இந்த காலக்கட்டத்தில் அவர் ஒரு மகத்தான தவறு செய்தார். ஒரு சீமைப்பசுவை வாங்கி வைத்திருந்த அவர், இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் புதிதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச விழாவின்போது, அதை பரிசாகக் கொடுத்து விட்டார்.

    இப்படி பசுவை தானமாகக் கொடுப்பது சரியல்ல என்றும், ஜோதிடப்படி ஏதாவது கிரகக் கோளாறு ஏற்படும்போதுதான் இப்படி செய்வார்கள் என்றும், பசுவை தானம் செய்வது நமது லட்சுமியை அடுத்தவர் வீட்டில் கொண்டுபோய் விடுவதற்குச் சமம் என்றும் டைரக்டர் கே.சோமு என்னிடம் சொன்னார்.

    அவர் சொன்னது போலவே நடந்து விட்டது.

    "அல்லி பெற்ற பிள்ளை'' படத்தினால் என் சகோதரர் நஷ்டம் அடைந்ததை அறிந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், என் அண்ணனை சந்தித்து "தூண்டா மணிவிளக்கு'' என்ற கதையை கொடுத்து, அதை படமாக்கச் சொன்னார். என் சகோதரரும் சம்மதித்து, கதைக்கு அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

    பூஜை போட்டு, நடிகர் -நடிகைகளுக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டது. படத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி, ரங்காராவ், அசோகன், தாம்பரம் லலிதா போன்றோர் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஏனோ, கடைசியில் என் சகோதரர் பின்வாங்கி விட்டார்.

    பின்னர் இந்தக் கதையை கோபாலகிருஷ்ணனே சொந்தமாகத் தயாரித்தார். அந்தப்படம்தான் "கற்பகம்.'' அந்தப் படம் வெள்ளி விழா கண்டது. அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, கோபாலகிருஷ்ணன் "கற்பகம்'' ஸ்டூடியோவை கட்டினார்.''

    இவ்வாறு முத்தையன் கூறினார்.
    எந்தவித கட்சி பேதமின்றி ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தலை வணங்குவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் தீவிரமாக போராட்டக் களத்தில் பங்கு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் பேசிய வீடியோ பதிவு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் விஜய் பேசியுள்ளதாவது:-

    எல்லோருக்கு வணக்கம். நான் உங்கள் விஜய் பேசுறேன். உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களுடைய கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத் தான், பறிக்கிறதுக்கு அல்ல. தமிழனுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு.

    எதையும் எதிர்பார்க்காம, யாருடைய தூண்டுதலும் இல்லாம எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்திருக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

    இது சம்பந்தமா கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்தால் நான் சந்தோஷப்படுவேன். இத்தனைக்கும் காரணமான அமைப்பை (பீட்டா) வெளியே அனுப்பிட்டா தமிழ்நாடே சந்தோஷப்படும்.

    இவ்வாறு பேசியுள்ளார்.
    விஜய்யுடன் மீண்டும் ஒரு படத்தில் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது எந்த படம் என்பதை கீழே பார்ப்போம்.
    விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால். இந்நிலையில், ‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், தற்போது விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து, அவரையே ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் தற்போது அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரே நேரத்தில் விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தது காஜல் அகர்வாலுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்-காஜல் அகர்வால் மீண்டும் இணையும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் திடீர் முடிவு எடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

    இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது, விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

    இதுதான் நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் காப்பதற்காக நாம் ஆற்றும் கடமை என்று குறிப்பிட்டுள்ள சி.வி.குமார், இவருடைய இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருடைய தயாரிப்பில் ‘அதேகண்கள்’  என்ற படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜல்லிக்கட்டு நடக்க நான் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்வதாக விஷால் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி நடிகர் சங்கத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-

    தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரமாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய பிறந்த நாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசியதாவது:-

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மக்களுக்காக செய்த வி‌ஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

    சமூக வலைதளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார், பீட்டாவை ஆதரிக்கிறார் என்று கூறிவருகிறார்கள். பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை. பீட்டாவுக்கு நான் விளம்பர தூதரும் இல்லை. இதை போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும்.

    ஜல்லிகட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன். விஷால் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார் என்றால் அதை நான் நேரடியாக கூறினால் தான் அது உண்மையான ஒரு செய்தியாகும். சமூக தளங்களில் உள்ள யாரோ ஒருவர் கூறும் தவறான செய்தி உண்மையான ஒன்றாகாது.

    இங்கே இளைஞர்கள் போராடுவது மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக இனி ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை நான் நடிகர் சங்க பொது செயலாளராக கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஜல்லிக்கட்டு நடக்க நான் தனிப்பட்ட முறையிலும் முயற்சி செய்து வருகிறேன்.

    இவ்வாறு விஷால் பேசினார்.

    நிகழ்ச்சியில் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சத்யராஜ், பிரபு, ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, ராஜேஷ், உதயா, மனோபாலா, லலிதகுமாரி, அஜய் ரத்னம், பிரேம், தளபதி தினேஷ், பிரகாஷ், காஜா மைதீன், வேலூர் வாசுதேவன், ஹேமச்சந்தி ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தொடர் போராட்டங்களுக்கு நடிகர் சூர்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

    பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்சினைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.

    தன்னெழுச்சியான போராட்டங்களின் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள் ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

    சட்டமும் ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

    மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும் இதேபோல் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினம் இன்று தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் அவருடைய பிறந்தநாளை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கின்றனர்.

    இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் சரண்யா பொன்வண்ணன் மற்றும் சங்க உறுப்பினர்களான மனோபாலா, குட்டி பத்மினி, ராஜேஷ், பிரபு, சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


    அதற்கு முன்னதாக, நடிகர் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று, அவருடைய சமாதிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது. 
    விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் ரிலீசான நான்கு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12-ந் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்தததாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், ‘பைரவா’ வெளியாகி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் படக்குழுவினர் விளம்பரம் செய்துள்ளனர். நான்கே நாட்களில் ‘பைரவா’ படம் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளது பெரிய சாதனையாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘கைதி எண் 150’ படமும் ரிலீசான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 150-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    ஜல்லிக்கட்டு நடத்த போலீஸ் தடை விதித்ததால் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி, கூளமேடு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நேற்று தடையை மீறி இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

    இதற்கிடையில் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி, குட்டிக்கரடு என்ற இடத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டன. இதற்காக நேற்று இரவோடு இரவாக அந்த பகுதியில் உள்ள மைதானம் சமன் செய்யப்பட்டு காளைகளும் கொண்டுவரப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டுக்கு நடிகரும், இசை அமைப் பாளருமான ஜி.வி. பிரகாஷ் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, டி.எஸ்.பிக்.கள் பொன். கார்த்திக்குமார், பாஸ்கர் மற்றும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகளை மீட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறினார்கள்.

    இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடல் ஆசிரியர் அருண்ராஜா காமராஜ் மற்றும் டைரக்டர் சண்முகம், உதவி இயக்குனர் கவுசிகபாண்டியன் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2 மணி நேரம் கழித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனாலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நாட்டு மாடுகளை காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், இளைஞர்களின் போராட்டத்தை உச்சநீதிமன்றம் மதித்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், இதற்காக மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீடீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது.

    ஜல்லிக்கட்டு தமிழ் மொழியின் அடையாளம், தமிழ்நாட்டின் கலாச்சாரம். பீட்டா போன்ற அமைப்பினரால் ஜல்லிகட்டை தடை செய்ய முடியாது. எனவே பீட்டா போன்ற அமைப்பினை தடை செய்ய வேண்டும். இதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது. பிரேசில் உள்பட பல வெளிநாடுகளில் நம்நாட்டு மாடுகள் இருந்து வருகிறது. ஆனால் இங்கு அழிந்து வருகிறது. அதனை காக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் ஜி.வி. பிரகாஷ் அளித்த பதில் விவரம் வருமாறு:-

    கேள்வி:-பீட்டா அமைப்பில் நடிகர், நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனரா?

    பதில்:- அவர்கள் அறியாமையில் உள்ளனர். அதில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும். வெளிநாட்டு குளிர்பானங்கள், உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தன்னாலே அவர்கள் ஓடிவிடுவார்கள். நான், தமிழ் மக்களின் நலனுக்காக போராடும் இளைஞர்களில் ஒருவனாக போராடி வருகிறேன்.

    கே:-ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரை உலகினரை திரட்ட நீங்கள் முயற்சி செய்தீர்களா?

    ப:- தமிழ் உணர்வு உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×