என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் ‘வணங்காமுடி’ படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    1997-ஆம் ஆண்டு அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த படம் ‘புதையல்’. இப்படத்தை செல்வா என்பவர் இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அந்த நேரத்தில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த அரவிந்த் சாமியின் மார்க்கெட் சரிவிற்கு இந்த படத்தின் தோல்வியும் ஒருகாரணமாய் அமைந்தது.

    இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் அரவிந்த்சாமி தற்போது மீண்டும் புதையல் படத்தின் இயக்குனர் செல்வா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்னொரு ஹீரோயினாக ‘அட்டக்கத்தி’ நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் கதையாக இருப்பதால், இப்படத்தின் நாயகனும், நாயகியும் போலீசாக நடிக்கவுள்ளார்களாம். நந்திதாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

    ‘வணங்காமுடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

    லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள `சிவலிங்கா', `மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.  இப்படத்தை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், பி.வாசு இயக்கத்தில் ராகவா  லாரன்ஸ் நடித்ததுள்ள மற்றொரு படமான `சிவலிங்கா' படத்தையும் பிப்ரவரி 17-ம் தேதியே வெளியிடப்போவதாக  அப்படக்குழுவினர்அறிவித்துள்ளனர்.

    பொதுவாக ஒரு நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னதாக 1998-ல்  கார்த்திக்கின் `உள்ளத்தை அள்ளி தா', `கிழக்கு மலை' ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகியது. பின்னர் சமீபத்தில் பரத்  நடிப்பில் `வெயில்', `சென்னை காதல்' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளது.

    இவ்வாறு ஒரே நாளில் ரிலீசாகும் படங்களில் ஒரு படம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்ற வரலாறு இருக்கும் நிலையில், இவ்விரு  படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்   கடைசி நேரத்தில் இந்த இருபடங்களில் ஏதாவது ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    ஆனந்தமான நடிகை ஒருவர் தனது உடல் எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சினிமாவில் நடிக்க வரும்போது ரொம்பவும் ஒல்லியாக வரும் நடிகைகள், தொடர்ந்து வாய்ப்புகள் வரும்போது, தனது உடல் ஆரோக்கியத்திலும், உணவு கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தாமல் கன்னா பின்னாவென்று தனது உடல் எடையை ஏற்றி விடுகின்றனர். உடல் எடை அதிகமான பிறகு, வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும்போதுதான் நடிகைகள் தங்கள் உடல் எடை மீது அக்கறை கொள்வார்கள்.

    இது இப்படியிருக்கையில், தற்போது ஒரு நடிகை ஒருவர் தனது உடல் எடையை கூட்ட முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, சுனாமியை மையமாக வைத்து வெளிவந்த மூன்றெழுத்து படத்தில் நடித்த ஆனந்தமான நடிகை தற்போது அவரது உடல் எடையை கூட்ட முயற்சித்து வருகிறாராம்.

    காரணம் கேட்டதற்கு, யாரோ சிலபேர் நடிகையிடன் கொழு கொழுவென்று இருந்தால்தான் சினிமாவில் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இதை உண்மை என்று நம்பிய நடிகையும் தற்போது அதற்கான முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறாராம். நடிகையின் இந்த முயற்சி அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘முத்துராமலிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதியை கீழே பார்க்கலாம்.
    ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா  இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து என ஒரு  பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை  தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடிக்  கொடுத்துள்ளார்.



    திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிப்ரவரி 24-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நாளில் ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள `எமன்' படமும் ரிலீசாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.
    பிரபல டைரக்டர் தாசரி நாராயணராவ் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    பிரபல டைரக்டர் தாசரி நாராயணராவ் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 74. தாசரி நாராயண ராவ் தெலுங்கு, இந்தி ஆகிய 2 மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். 53 படங்களை தயாரித்தும் இருக்கிறார். 250 படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    ஐதராபாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த தாசரி நாராயணராவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்து நுரையீரலில் நோய் தொற்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து தாசரி நாராயணராவ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு நடிகர்-நடிகைகள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
    ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக உயர்ந்தவர் சந்தானம். காமெடியனாக அவர் வலம் வந்த போதே  அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் தற்போது, `சர்வர்  சுந்தரம்', `மன்னவன் வந்தானடி', `சக்க போடு போடு ராஜா', `ஓடி ஓடி உழைக்கனும்' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து  வருகிறார்.

    முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியான `சிவா மனசுல சக்தி', `பாஸ் என்கிற பாஸ்கரன்', `ஒரு கல் ஒரு கண்ணாடி', `ஆல்  இன் ஆல் அழகு ராஜா', `வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' உள்ளிட்ட படங்களில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். கடைசியாக வெளியான `கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் மட்டுமே சந்தானம் இல்லை.

    ராஜேஷ்-சந்தானம் காமெடி கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சந்தானத்தை வைத்து, புதிய  படம் ஒன்றை இயக்க ராஜேஷ் முடிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் தயாராக உள்ள இப்படத்தை  தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

    இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கயல் ஆனந்தி அல்லது நிக்கி கல்ராணியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    பாண்டிராஜ் இயக்கத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்த சிவகார்த்திகேயன், விமருக்காக `மன்னர் வகையறா' படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் விமல்-சிவகார்த்திகேயன் இணைந்து `கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்திருந்தனர்.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, விமல்-சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே நல்ல  நட்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து விமல் நடித்த `மாப்ள சிங்கம்' படத்தில் ஒரு பாடலை பாடினார்.

    இந்நிலையில், விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் `மன்னர் வகையறா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் விமலுடன் கயல் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து  வருகின்றனர்.

    `துருவங்கள் பதினாறு' படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில், `மன்னர்  வகையறா' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாட உள்ளதாக கூறப்படுகிறது.
    அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் நடித்துள்ள `குற்றம் 23' படம் ரிலீஸ் தேதியை கீழே பார்க்கலாம்.
    அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'குற்றம்  23'.  மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும்  'குற்றம் 23' திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று  வெளியாக இருக்கின்றது.  

    'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் 'குற்றம் 23' படத்திற்கு விஷால்  சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மேலும் கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவில் `குற்றம் 23' படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

    மேலும் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என  வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி  இருப்பது குறிப்பிடத்தக்கது.
    சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால், விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார்.
    சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால், விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார்.

    நடிக்கும் ஆசையில் ஊரில் இருந்து ரெயில் ஏறிய விஜயகுமார், சென்னை வந்து பெட்டிக்கடை வைத்திருக்கிற அண்ணனை சந்தித்தார். அண்ணனுக்கு இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "எந்தவித தகவலும் இல்லாமல் தன்னந்தனியாய் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து அண்ணனை பார்த்ததும் அவருக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்னப்பா திடீர்னு?'' என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.

    அண்ணன் கேட்ட தோரணையிலேயே எனது சென்னை விஜயம் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்து போயிற்று. நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்ததாக கூறினால், மறுநிமிடமே ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவார் என்று தோன்றியது. இதனால் "ஊரை சுற்றிப் பார்க்க வந்தேன்'' என்று பொய் சொல்லி சமாளித்து விட்டேன்.

    ஆனாலும் அண்ணனிடம் நாலைந்து நாட்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. அண்ணன் கடையில் சுப்பாராவ் என்பவர் வேலை பார்த்தார். அந்த சின்னக் கடையில் ஒரே நேரத்தில்

    2 பேருக்கு மேல் நிற்க முடியாது. என்றாலும் தங்கும் ஆசையில் `பீடா' தயாரிக்க கற்றுக் கொடுக்கும்படி கடையில் இருந்த சுப்பாராவிடம் கேட்டேன்.

    அவர் கற்றுக்கொடுப்பதற்குள் அண்ணன் என்னைப் புரிந்து கொண்டு, புது டிரெஸ், ஷு எல்லாம் வாங்கிக் கொடுத்து ஊருக்கு ரெயிலேற்றி விட்டுவிட்டார்.

    ஒரு வாரம்கூட ஆகவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்த என்னை அப்பா ஆச்சரியமாக பார்த்தார். அப்பா எனது சென்னைப் பயணம் உடனடியாக முடிந்து போனது பற்றி கேட்டபோது, "மறுபடியும் சென்னைக்குப்போய் நடிக்கும் முயற்சியை தொடங்கப் போகிறேன்'' என்றேன்.

    இப்போது அப்பா என்னிடம், "சென்னையில் உனக்கு தெரிந்தது உன் அண்ணன் மட்டும்தானே. இது மாதிரி ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்கக்கூடாது என்பதற்காகத்தானே உன்னை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டான்'' என்றார்.

    இப்போது அப்பாவிடம் கொஞ்சம் தைரியமாக வாய் திறந்தேன். "சென்னையில் எனக்குத் தெரிந்த இன்னொருவர் இருக்கிறார். அவரது அறையில் தங்கிக்கொண்டு சினிமாவுக்கும் முயற்சிப்பேன்'' என்றேன்.

    என் பிடிவாதமும், அதில் நிலைத்து நின்ற உறுதியும் அப்பாவுக்கு பிடித்திருக்க வேண்டும். என் விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்.

    "சரி சரி. மாதம் உனக்கு நான் எவ்வளவு பணம் அனுப்பி வைக்கவேண்டும்?'' என்று கேட்டார்.

    "மாதம் முன்னூறு ரூபாய் அனுப்பினால் போதும்'' என்றேன். முன்னூறு ரூபாய் என்பது அப்போது கொஞ்சம் பெரிய தொகைதான். ஏனென்றால் தஞ்சையில் இருந்து சென்னை வர ரெயில் கட்டணமே 7 ரூபாய்தான்!

    நான் தெளிவாக சொல்லி விட்டபிறகு அப்பா எந்த குறுக்கீடும் செய்யவில்லை. "போய் முயற்சி பண்ணு. உன் ஆசை அதுதான் என்றால், அதிலேயே தீவிரமாக முயற்சி செய்'' என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார், அப்பா.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    இப்படியாக இரண்டாவது முறையும் சென்னை வந்த விஜயகுமாருக்கு, சுப்பாராவ் தங்கியிருந்த மைலாப்பூர் அப்பு முதலி தெருவில் இருந்த அறை அடைக்கலம் கொடுத்தது. தம்பி வந்தது அண்ணனுக்கும் தெரிந்து போயிற்று. இதற்குள் தம்பியின் நோக்கம் அப்பாவால் `தபால்' மூலம் அண்ணனுக்கு விளக்கப்பட்டுவிட, அண்ணன் தரப்பிலும் எதிர்ப்பில்லை.

    சுப்பாராவின் முயற்சியில் விஜயகுமாருக்கு முதலில் அமைந்தது நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புதான்.

    அதுபற்றி விஜயகுமார் விவரிக்கிறார்:-

    "அப்போது ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பிரபலம். அவரிடம் நடித்துக்கொண்டிருந்த சரோஜா பிரிந்துபோய் "சரோஜ் நாடக தியேட்டர்'' ஆரம்பித்தார். இந்த கம்பெனியின் மானேஜர் மகாதேவ அய்யரிடம் சுப்பாராவ் என்னை சிபாரிசு செய்தார். என்னிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்ட மகாதேவ அய்யர், அப்போது தயாராக இருந்த "ராமபக்தி'' நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு தந்தார்.

    அதுவும் முதல் நாடகத்திலேயே எனக்கு இரட்டை வேடம்! நாடகத்தின் தொடக்கத்தில் பிள்ளையார் வேடம்; முடியும்போது மகாவிஷ்ணு

    வேடம்!நாடக ஒத்திகைகள் மளமளவென நடந்தன. இதற்குள் சுப்பாராவுடன் நான் தங்கியிருந்த மேன்சனில் ஒன்றிரெண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். நான் நடிக்கப்போகும் விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருந்தேன்.

    நாடகத்தின் முதல் நாள் காட்சி தொடங்கவிருக்கிறது. என்னைத்தவிர மற்ற எல்லாருக்கும் `மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த நான், "எனக்கு மேக்கப் போடவில்லையே'' என்று கேட்டுவிட்டேன். கேட்டதுதான் தாமதம், விநாயகர் கவசத்தை என் தலையில் மாட்டி நாடக அரங்கில் உட்கார வைத்து விட்டார்கள். கையில் ஒரு எழுத்தாணியும் கொடுத்திருந்தார்கள்.

    நாடக காட்சிக்கான திரைவிலகியதும், விநாயகரானநான் எழுத்தாணியால் எழுதுகிற காட்சிதான் ரசிகர்களுக்கு தெரியும்.

    நாடக இடைவேளை வந்தபோது மேன்ஷன் நண்பர்கள் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களிடம், தலைக்கு கவசம் போட்டபடி விநாயகராக வந்தது நான்தான் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை! அந்த நாட கத்தில் கடைசியில் நான் ஏற்றிருந்த "மகா விஷ்ணு'' வேடம் தான் அவர்களை நம்ப வைத்தது.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    18 வயதில் நாடகம் மூலம் நடிகராக வெளிப்பட்ட நடிகர் விஜயகுமாருக்கு, சினிமா வாய்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு ஜோதிடர். அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

    "நான் நாடகங்களில் நடித்து வந்த நேரத்தில் கும்பகோணம் வையாபுரி ஜோசியர்எனக்கு அறிமுகமானார். இவர் டைரக்டர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மல்லியம் ராஜகோபால் போன்றவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தார்.

    இவரது நட்பு எனக்கு கிடைத்தபோது, அவருடன் தொடர்பு வைத்திருந்த எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் என்னையும் அழைத்துப் போனார். அப்படி அழைத்துப்போனபோது டைரக்டர் ராமண்ணா எனக்கு அறிமுகமானார். என் நடிப்பு ஆர்வம் ஜோதிடர் மூலமாக அவருக்கு சொல்லப்பட்டதும் அவர், "இப்போது சிவாஜி - பத்மினி நடித்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் "ஸ்ரீவள்ளி'' படத்தில் சின்ன வயது முருகனாக நடிக்க ஒரு இளைஞர் தேவைதான்'' என்றவர், அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார். இந்த வகையில் படத்தின் பெரிய முருகன் சிவாஜி; சின்ன முருகன்

    நான்!1961-ல் வெளியான இந்தப்படம்தான் தமிழில் தயாரான முதல் கலர் படம்.

    இந்தப்படம் வந்தபோது, ஒரே நாளில் எங்கள் சொந்த ஊரான "நாட்டுச்சாலை'' முழுக்க பிரபலமாகி விட்டேன்'' என்றார்,

    விஜயகுமார்.படத்தில் நடித்துவிட்ட போதிலும், தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதற்குக் காரணம் அவரது 18 வயதுப் பருவம்தான். சிறுவனாகவும் இல்லாமல், இளைஞனாகவும் இல்லாத அந்த இரண்டுங்கெட்டான் வயதில் இருந்த விஜயகுமாரிடம், "கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கதாநாயகன் வாய்ப்பை நானே தருகிறேன்'' என்று டைரக்டர் ராமண்ணா கூறினார்.

    அதன்படி விஜயகுமார் பொறுமையுடன் காத்திருந்தார். ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டோ அல்ல; ஐந்து ஆண்டுகள்!
    தமிழகத்தில் அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் - இளைஞர்கள் ஒருவாரத்திற்கு மேலாக மெரினாவில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தார்.

    இறுதி நாளில் வன்முறை நடைபெறுவதற்கு முன்பாக மெரினாவில் மாணவர்களுடன் சமாதான முயற்சியிலும் ஈடுபட்டார். அதோடு, வன்முறைக்கு பிறகு சில மாணவர்களுடன் முதல்வரை சந்தித்த லாரன்ஸ், சிறையில் உள்ள அப்பாவி மாணவர்கள்-இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். 

    இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பிரிவு மாணவர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த சில தினங்களாக நான் அரசியலுக்கு வருவது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து தெளிவு படுத்தவே இந்த சந்திப்பு. 

    தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என எண்ணம் எனக்கு ஏதுமில்லை. மாணவர்களுடன் கலந்து ஆலோசித்து கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்து சில உதவிகளை மட்டும் செய்வது என்று முடிவு செய்துள்ளேன். 

    அதற்காக மாணவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்க உள்ளோம். அமைப்பின் பெயர் உட்பட அனைத்து மாணவர்களின் முடிவு தான். இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த அமைப்பில் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இருக்க மாட்டார்கள். 

    தற்போதைக்கு அரசியலுக்கு வர வேண்டும் எண்ணம் இல்லை என்றாலும் அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    இளையராஜா, கமல், பி.சி.ஸ்ரீராம் ஆகியோருடன் இணையும் வாய்ப்பை அமீர் நிரகாரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் புதிய படம் ‘சத்ரியன்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், சரத் லோகித் சவா, நரேன், அருள்தாஸ், ஐஸ்வர்யா தத்தா, கவின் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இதில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, தியாகராஜன், இயக்குனர் அமீர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    அப்போது அமீர் பேசும்போது, என்னுடைய முதல் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால், இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமல் இவர்கள் மூன்று பேரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். அப்படியொரு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால், அதை நான் நிராகரித்து விட்டேன். 
    விஜய் 61- படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘தெறி’, ‘பைரவா’ படங்களை தொடர்ந்த விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லி மீண்டும் இணையும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.

    பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுவிவரங்களையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படத்தில் விஜய்யுடன் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், சத்யன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையையும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், முத்துராஜ் கலையையும், அனல் அரசு சண்டைக் காட்சியையும், ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு திரைக்கதையையும் அமைக்கிறார்கள்.

    நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். அட்லி கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×