என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    விஜய் 61- படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘தெறி’, ‘பைரவா’ படங்களை தொடர்ந்த விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லி மீண்டும் இணையும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.

    பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த விஷயங்கள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுவிவரங்களையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படத்தில் விஜய்யுடன் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், சத்யன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையையும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், முத்துராஜ் கலையையும், அனல் அரசு சண்டைக் காட்சியையும், ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு திரைக்கதையையும் அமைக்கிறார்கள்.

    நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். அட்லி கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
    இசையமைப்பாளர் டி.இமான், ‘போகன்’ படத்தின் பின்னணி இசைக்காக அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜெயம் ரவி - அரவிந்த்சாமி - ஹன்சிகா ஆகியோர் கூட்டணியில் நடிப்பில் வருகிற பிப்ரவரி 2-ந் தேதி வெளியாகவிருக்கும படம் ‘போகன்’. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கியிருக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். ஏற்கெனவே, ரோமியோ ஜுலியட் படத்தில் டண்டணக்கா பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய டி.இமான், இப்படத்திலும் அந்த மாதிரியான ஒரு பாடலை இசையமைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘போகன்’ படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்று சொல்வதைவிட, எங்கள் கூட்டணியோடு மீண்டும் இணைந்து இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். எங்களின் கூட்டணியில் தற்போது அரவிந்த் சுவாமியும் இணைந்து இருப்பது மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம்பெற்ற புதுவிதமான கானா பாடலான 'டண்டணக்கா' பாடலைப்போல இந்த படத்திலும்  இருக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ் திரையுலகின் நடிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யும்விதமாக 'டமாலு டுமீலு' பாடலை உருவாக்கினோம். இந்த பாடலுக்கு தன்னுடைய குரலால் மேலும் சிறப்பு சேர்த்து இருக்கிறார் அனிருத். ‘போகன்’ படம் இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருப்பதால், பிண்ணனி இசையில் நான் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘போகன்’ படத்தை 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.
    நிவின் பாலி நேரடியாக தமிழில் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் நேரடியாக நடிக்கும் புதிய படத்தை கவுதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் நிவின் பாலியுடன், நட்டி நடராஜும் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

    அதன்படி, இப்படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடியாக இப்படத்தில் நிவின் பாலி வருகிறாராம். அதேபோல், படகுகளை சரிசெய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறாராம். இவர்கள் இருவரையும் மையப்படுத்திதான் இந்த கதை நகருமாம்.

    இப்படத்தின் தலைப்பான ரிச்சி என்பது நிவின்பாலி நடிக்கும் கதாபாத்திரன் பெயராகும். இப்படத்தில் நிவின் பாலி தன்னுடைய சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறாராம். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டில் டிசைனையும் வெளியிடவுள்ளனர்.

    மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ‘யு டர்ன்’ புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத், லட்சுமி பிரியா, சந்திரமௌலி உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.
    ஜெகதீஷ் பாண்டியன் இயக்கி இருக்கும் 'எஸ்கேப்' என்ற படம் வசனங்கள் இன்றி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே காணலாம்.
    தென் இந்தியாவில் சிறந்ததொரு குறும்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜின்  'பெஞ்ச் பிலிக்ஸ்'. தொடர்ந்து எண்ணற்ற திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களையும், அவர்களது படைப்புகளையும்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இதன் மூலம் பல்வேறு குறும்படங்களும்,  ஆவணப்படங்களும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனது. இவர்களின் அடுத்த படைப்பு, ஜெகதீஷ் பாண்டியன்  இயக்கி இருக்கும் 'எஸ்கேப்' குறும்படம்.

    13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த 'எஸ்கேப்' குறும்படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், எந்த ஒரு  வசனமுமின்றி உருவாக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. டிமோத்தி பக்மேனின் இசை மற்றும் சேத் பாண்டியனின் ஒளிப்பதிவு இந்த  'எஸ்கேப்' படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை வெகுவாக சொல்லலாம். "சிலருடைய வாழ்க்கையின் மிக  முக்கியமான தருணங்களில், நம்முடைய பங்கும் பெரிதாக இருக்க கூடும். அவர்கள் யார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும்  கூட..." இது தான் இந்த 'எஸ்கேப்' குறும்படத்தின் ஒரு வரி கதை.

    நல்ல கதையில் மட்டும் நடிக்க விரும்புவதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். ஹன்சிகா அளித்த முழு பேட்டியை கீழே காணலாம்.
    ஜெயம் ரவியுடன் ஹன்சிகா நடித்த ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது தெலுங்கில் ஒரு படத்தில்  நடிக்கிறார். பட வாய்ப்புகள் குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்....

    ‘‘ஒப்பந்தமான படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும். இதை மிகவும் ஒழுங்காக கடைப்பிடிக்கிறேன். மற்றபடி அந்த  படம் எப்படி? அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும்? என்று நினைத்து மனதை குழப்பிக் கொள்ளமாட்டேன். இந்த மனதைரியம்  தான் நான் சினிமாவில் நீடிக்க உதவுகிறது.

    பணம் சம்பாதிப்பதைவிட, ரசிகர்களை சம்பாதிப்பது தான் முக்கியம். அதை நான் முழுமையாக பெற்றிருக்கிறேன். பேஸ்புக்கில்  எனக்கு 60 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    கதை பிடித்து இருந்தால் பெரிய, சிறிய கதாநாயகன் என்று பார்க்காமல் நான் நடிக்கிறேன். கதாபாத்திரம் பிடிக்காவிட்டால்  பெரிய நடிகர்கள் படம் என்றாலும் நடிக்க மாட்டேன். கதை தான் எனக்கு முக்கியம்.

    போட்டி மார்க்கெட், முதல் இடம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. பல படங்களில் நடிப்பதை விட நல்ல கதையாக  இருந்தால் ஒரு படத்தில் நடிப்பதையே விரும்புகிறேன். சில கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம்  கொடுக்கும் பாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். வயதான பிறகு அதுபோன்ற படங்களில் நடிப்பது பற்றி யோசிக்கலாம்.  எனக்கு இப்போது 25 வயது தான் ஆகிறது’’.
    மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளன. அந்த படங்களின் தோல்வியை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதை கீழே விரிவாக பார்ப்போம்.
    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த ‘முகமூடி’ ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘நந்தலாலா’ ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவின. இதனை சமீபத்தில் நடந்த ‘நிசப்தம்’ ஆடியோ வெளியீட்டில் மிஷ்கின் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது,

    ஒரு படத்தின் டிரைலரை பார்த்தே அந்த படத்தின் வெற்றியை கணிக்க முடியாது. நான் ‘முகமூடி’ படத்தை எடுத்து முடித்து டிரைலரை பார்க்கும்போது, அந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகும், நான் ஹாலிவுட் வரை செல்வேன் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
     
    அதேபோல், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை எடுத்து மூன்றரை கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டபிறகு, என்னால் 40 நாட்கள் வெளியே வரவே முடியவில்லை. ஆனால், அதற்காக என்னுடைய தன்னம்பிக்கையை கைவிடவில்லை. அதைத் தொடர்ந்து நான் போரடினேன். பாலா என்ற ஒரு கலைஞன் என்னை அழைத்து பிசாசு என்ற படத்தை பண்ண வைத்தார். அந்த படம் மூலம் நான் மீண்டும் எழுந்து நின்றேன். தோல்விகளை கண்டு கலங்கவே கூடாது.

    நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்தபிறகு, திரும்பிப் பார்க்கவே கூடாது. அடுத்த அடி போய்க்கொண்டுதான் இருக்க வேண்டும். ஒரு படம் தோல்வியடைகிறேதோ, வெற்றியடைகிறதோ என்று கவலைப்படாமல் அடுத்த படம் பண்ணப்போறோம் என்று நினைத்துக் கொண்டுதான் நகர வேண்டும்.

    என்னுடைய மிகச்சிறந்த படங்களே என்னுடைய ஓடாத படங்கள்தான். அது, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். படம் எடுக்க வருகிறவர்கள் ரொம்பவும் தெளிவாக இருக்கவேண்டும். 100 ரூபாய் போட்டால் 400 ரூபாய் கிடைக்கும் என்பதற்கு இது சூதாட்ட கிளப் இல்லை. கயிறு மேல் நடப்பதுபோல்தான் சினிமா. கீழே விழுந்தால் மரணம்தான். ஆனால், இந்த மரணத்தில் நிறைய பேர் கைபிடிக்க வருவார்கள். ஆகையால், வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து செல்லக்கூடாது.

    சினிமா என்பது சாதாரண காடு கிடையாது. பயங்கரமான, மோசமான காடு. இதில், பல காண்டா மிருகங்களும், பல பிசாசுகளும் ஒளிந்திருக்கும். நீங்கள் நடந்து போக பாதை இருக்கும், வெளிச்சம் இருக்கும். ஆனால் நடந்து போகவே முடியாது. அவை எல்லாமே புதைகுழிகள்தான். மனசை திடப்படுத்திக்கொண்டுதான் இதில் பயணிக்க வேண்டும் என்று கூறினார். 
    இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் `விழித்திரு' திரைப்படம் தணிக்கைக்குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா -  வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' திரைப்படத்தை,  'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா,  சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விழித்திரு' திரைப்படம் தணிக்கை  குழுவினரிடம் `யு' சான்றிதழை பெற்றுள்ளது.  

    "சமூதாயத்தில் நடக்க கூடிய உண்மை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'விழித்திரு' படத்திற்கு,  தணிக்கை குழுவினர் `யு' சான்றிதழ் வழங்கி இருப்பது, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. வரும் பிப்ரவரி  ரிலீசாக இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக மீரா கதிரவன் கூறினார்.
    பள்ளி மாணவர்களுக்கு தனது தேவி அறக்கட்டளை மூலம் விஷால் மிதிவண்டிகள் வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தனது அம்மாவின் பெயரில் தேவி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன்மூலம், திறமை இருந்தும் கல்விக்காக கஷ்டப்படும் குழந்தைகள், மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பல கிராமங்களிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வருவதை அறிந்த விஷால், தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் சுலபமாக பள்ளிக்கூடம் வருவதற்கு 35 இரு சக்கர மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

    விஷாலே நேரடியாக வந்து அந்த குழந்தைகளுக்கு தனது கையால் மிதிவண்டிகளை வழங்கினார். மிதி வண்டிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், பள்ளி நிர்வாகமும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 
    `சக்க போடு போடு ராஜா' படத்தில் சண்டைக்கலைஞர்களை சந்தானம் அடித்து துவைக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    `சக்க போடு போடு ராஜா' படத்தில் சண்டைக்கலைஞர்களை சந்தானம் அடித்து துவைக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.

    ‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அதன்பின்னர், கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, சேதுராமன் இயக்கத்தில் `சக்க போடு போடு ராஜா'  படத்தில் நடித்து வருகிறார்.

    இதில் `சக்க போடு போடு ராஜா' படத்திற்காக சமீபத்தில் அதிரடியான சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.  சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்ற சண்டைக்காட்சிக்காக கடும் பயிற்சி எடுத்துக் கொண்ட சந்தானம் சுமார் 40க்கும்  மேற்பட்ட சண்டைக் கலைஞர்களை அடித்து துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சண்டைக்காட்சியில் கயிறுகளில்  தொங்கிக் கொண்டு சண்டை போடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான  சண்டைப்பயிற்சிகளை முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் கமல கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

    சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மக்களுக்கு உபயோகப்படும் வகையில், ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார். இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
    சமுத்திரக்கனி தற்போது `தொண்டன்' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். மேலும் விக்ராந்த், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் முழுக்க முழுக்க சமூக பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக `நிமிர்ந்து நில்', `அப்பா' உள்ளிட்ட படங்களில் முக்கிய சமூக பிரச்சனைகள் குறித்து எடுத்திருந்தார்.

    அதேபோல் `தொண்டன்' படத்திலும் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை எடுத்துக் கூறவுள்ளார். அதாவது, இப்படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்யும் நபராக வருகிறாராம். உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதே இவரின் வேலையாக கொண்டுள்ளாராம்.

    மேலும் `தொண்டன்' படம் ரிலீசின் போது, மக்களுக்கு உபயோகப்படும் வகையில், ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கவும் சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. `தொண்டன்' படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி `கிட்னா' என்னும் படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நடராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இன்றைய தினம் சந்தோஷமான செய்தியுடன் துவங்கியுள்ளது. அதாவது அவரது மனைவி ரஜினி  ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். முன்னதாக இருவருக்கும் இடையே 2011 டிசம்பரில் திருமணம் நடந்தது. கல்லூரியில் தனது  ஜீனியரான ரஜினி நடராஜை விஷ்ணு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஜினி நடராஜ் பிரபல நடிகரும், இயக்குநருமான  கே.நடராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்னதாக இருவரும் 4 வருடங்கள் காதலித்து வந்தனர்.


    இந்நிலையில், விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில், "கடவுளே! எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது. எனக்கும்,  ரஜினிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    `மாவீரன் கிட்டு' படத்திற்கு பிறது விஷ்ணு விஷால் தற்போது, `கதாநாயகன்', `சின்ட்ரல்லா', `இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட  படங்களில் நடித்து வருகிறார்.
    அஜித்தின் `தல 57' படம் ரம்ஜான் ரிலீசாக திரைக்கு வர உள்ளநிலையில், அஜித்துக்கு போட்டியாக சல்மான் கான் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57'. மேலும்  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து  வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து  வரும் `தல 57' படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், சல்மான் கானின் `டியூப் லைட்' படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி  வரும் படத்தையும் அதே நாளில் வெளியிட முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ×