என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்வாக டி.ராஜேந்தர் கேள்விகள் சிலவற்றை கேட்டுள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.

    திருச்சியில் இன்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட மீத்தேன் திட்டத்திற்கு வேறு ஒரு உருவம் கொடுத்து அதனை ஹைட்ரோ கார்பன் திட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு பல்வேறு கட்ட போராட்டம் மூலம் தடை பெற்றோம்.

    அரபு நாடுகளில் பாலைவன பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் இயற்கை எரிவாயு திட்டம் தமிழகத்திற்கு தேவையற்றது. அதிலும் இயற்கை எழில் நிறைந்த, வேளாண் மண்டலமாக கருதப்படும் நெடுவாசல் கிராமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை. உடனே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.



    இந்த திட்டம் வந்தால் வேளாண்மை பாதிக்கும், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு இந்த திட்டத்தை அனுமதிக்காது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாது என்று கூறியிருப்பது ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. ஆனாலும் மத்திய அரசு இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க.வை அழிக்க பெரிய சதி நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் முதலில் இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். பின்னர் அவர்கள் இணைந்து செயல்படவில்லை. அவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது யார்? அவர்கள் பிரிவும் அ.தி.மு.க.வை அழிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. எல்லை மீறி வந்தால் இலங்கை அரசு கைது செய்து வழக்கு தொடரலாம். ஆனால் சுட்டுக்கொல்லும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்?

    ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக இருந்த போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு தற்போது நீதி விசாரணை நடத்தக்கோரி உண்ணாவிரதம் இருப்பதில் மர்மம் உள்ளது.



    மேலும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம், ஓ.பி. எஸ். அணிக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு மரியாதை உள்ள இடத்தில் மட்டுமே நான் இருப்பேன் என்றார். அதேபோல் ஆர். கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

    வரலட்சுமி இன்று தொடங்கிய சேவ் சக்தி கையெழுத்து இயக்கத்துக்கு நடிகர், நடிகைகள், பொதுமக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடும் விதத்தில் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை வரலட்சுமி சமீபத்தில் ஆரம்பித்தார். இந்த அமைப்பு மூலம், தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை அதிகப்படுத்தவேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

    உலக மகளிர் தினமான இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் வரலட்சுமி தலைமையிலான சேவ் சக்தி அமைப்பினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஷால், பிரசன்னா, நடிகைகள் தன்ஷிகா, சினேகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் பங்கேற்றுள்ளார்கள்.



    மேலும், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்த கையெழுத்து இயக்கத்துக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார். 
    பணமோசடி வழக்கில் நேற்று கைதுசெய்யப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் இன்று திகார் சிறையில் அடைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், குறைந்த வட்டிக்கு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

    டெல்லியில் உள்ள ‘புளூ ஹோஸ்டல்’ என்ற கட்டுமான நிறுவனத்திலும் பவர்ஸ்டார் சீனிவாசன் கைவரிசை காட்டியுள்ளார். அந்த கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் ரூ.500 கோடிக்கு கடன் வாங்கி தருவதாக சீனிவாசன் கூறியுள்ளார். இதனை நம்பி கட்டுமான நிறுவனம் கமி‌ஷனாக ரூ.10 கோடி கொடுத்துள்ளது. இந்த பணத்தை வாங்கிக் கொண்டு சீனிவாசன் கடன் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.



    இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சீனிவாசன் ஆஜராகாததால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து டெல்லி போலீசார் நேற்று சென்னை வந்து பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர்.

    அண்ணாநகரில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட சீனிவாசன் பெரியமேட்டில் உள்ள எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். நேற்று மாலையில் அவரை ரெயிலில் அழைத்துச் செல்லவே திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் பவர்ஸ்டார் சீனிவாசன் விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார்.
    கேரளா அரசு வழங்கும் சினிமா விருதுகள் பட்டியலில் பின்னணி பாடகி சித்ரா சிறந்த பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விருதுக்கு தேர்வானவர்களை கீழே பார்ப்போம்.
    கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தற்போது கேரள அரசின் 47-வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சிறந்த நடிகராக விநாயகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘கம்மட்டிப்பாடம்’ என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    ‘அனுராக கரிக்கின்வெள்ளம்’ என்ற படத்தில் நடித்த ரெஜீசா விஜயன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த படமாக ‘மேன்ஹோல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த டைரக்டருக்கான விருது ‘மேன்ஹோல்’ படத்தை இயக்கிய விது வின்சென்டுக்கு கிடைத்துள்ளது. சிறந்த இசை அமைப்பாளராக ஜெயச்சந்திரனும், சிறந்த பாடகியாக சித்ராவும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



    சிறந்த பாடகராக சூரஜும், சிறந்த பாடலாசிரியராக குறுப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை கேரள சட்டம் மற்றும் கலாச்சாரதுறை மந்திரி பாலன் அறிவித்தார்.
    சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தா - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    1950-களில் இருந்து 70-கள் வரை திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. நடிகையர் திலகம் என போற்றப்பட்ட இவரது திரையுலக வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அன்றைய உச்ச நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டிபோடும் அளவுக்கு இவரது நடிப்பு அபாரமானது.

    அப்பேர்பட்ட நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க சமீபத்தில் நாக் அஸ்வின் என்பவர் திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கான திரைக்கதை எழுத ஆரம்பித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திரைக்கதை எழுதும் பணியினை முடித்தத நாக் அஸ்வின், அப்படத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனையில் ஈடுபட்டு வந்தார்.

    பாலிவுட் நடிகை வித்யாபாலன் மற்றும் நயன்தாரா, நித்யாமேனன் உள்ளிட்ட நடிகைகள் அவரது பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர்களையெல்லாம் விட்டுவிட்டு சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷை இப்படத்தின் கதாநாயகிகளாக நாக் அஸ்வின் ஒப்பந்தம் செய்துள்ளார். இதை மகளிர் தினமான இன்று சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.



    இரண்டு பேரில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தாவுக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு ‘மகாநதி’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

    நாக் அஸ்வின் இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இளையராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 
    சென்னையில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் நடிகை அர்ச்சனா கலந்துகொண்டு பெண்களுக்கு பரிசுகள் வழங்கினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சென்னையில் உள்ள மான்ட்போர்டு சமுதாய வளர்ச்சி தொண்டு நிறுவனம் நலிந்த பிரிவினருக்கும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு தொழில் பயிற்சிகளும் அளித்து வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர். தொண்டு நிறுவனத்தின் சமூக சேவை பணிகளை விளக்கும் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் பெண்களின் நடன போட்டிகளும் வயதான பெண்கள் மற்றும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. நலத்திட்ட பணிகளை ஒருங்கிணைக்கும் சுய உதவி பெண்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் நடிகை அர்ச்சனா கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மகளிர் சுய உதவி குழு அமைப்பினருக்கும் பரிசுகள் வழங்கினார்.



    விழாவில் அர்ச்சனா பேசும்போது, “மான்ட்போர்டு சமூக வளர்ச்சி தொண்டு அமைப்பு பெண்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவிகளையும் வழங்குகிறது. கடவுளை பார்த்தது இல்லை. அது ஒரு நம்பிக்கை. இந்த தொண்டு அமைப்பானது நலிந்த மக்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளித்து உதவிகள் செய்வதன் மூலம் கடவுள் இந்த அமைப்புக்குள்தான் இருக்கிறார் என்று உணர்த்தி இருக்கிறது” என்றார்.

    விழாவில் மான்ட்போர்டு சமூக வளர்ச்சி நிறுவன இயக்குனர் ஜோசப் லூயிஸ், திட்ட இயக்குனர் மாத்யூ அலெக்சாண்டர் ஆகியோர் நடிகை அர்ச்சனாவுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள். நகைச்சுவை நடிகர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிரேசி மோகனின் நகைச்சுவை நாடகமும் நடந்தது.
    தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக விஷால் அணியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால் உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.



    இந்நிலையில், விஷால் தலைமையிலான அணிக்கு ‘நம்ம அணியினர்’ என்று பெயர் வைத்துள்ளனர். வேட்பார்களையும் அறிமுகப்படுத்திவிட்ட இந்த அணியினர் நேற்று வடபழனி பகுதியில் ஓட்டு கேட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தயாரிப்பாளர்களின் வீட்டுக்கும் சென்று தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    இந்த ஓட்டு சேகரிப்பில் நம்ம அணி சார்பில் தலைவர் பதவிக்கும் போட்டியிடும் விஷால் மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    சினிமாவில் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது அல்ல என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். இது குறித்த அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

    “வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உயர்ந்த இடத்துக்கு போகிறார்களா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் போக வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைமைக்கு வருவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முன்னணி கதாநாயகியாக உயர வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக உழைத்தேன். தற்போது என்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.

    முதல் படத்தில் வெற்றியை கண்ட பல கதாநாயகிகள் அதன்பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் எனது முதல் படம் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. அனைத்து படங்களுமே நன்றாக ஓடின. இதனால் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு வந்து விட்டேன்.



    எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். ஏன் நடிக்க கூடாது? மற்ற துறைகளில் இருக்கும் பெண்கள் திருமணத்துக்கு பிறகும் அவற்றில் தொடர்கிறார்கள். நடிகைகள் மட்டும் சினிமாவில் எதற்காக நீடிக்க கூடாது? திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.

    நான் சினிமாவில் உயர கடினமாக உழைத்தேன். சினிமாவில் மட்டுமே பெயரும் புகழும் வேகமாக வந்து சேர்கிறது. வேறு எந்த தொழில்களிலும் இதுபோல் இல்லை. ஆனாலும் சினிமாவில் கிடைக்கும் புகழ் நிலையானது என்று நினைத்துக்கொள்ள கூடாது. நடிகர்-நடிகைகளின் கதாபாத்திரங்கள் எப்படி கற்பனையானதோ அதுமாதிரிதான் இதுவும். தங்களுக்கு கிடைக்கும் பெயர், புகழ் நிரந்தரம் இல்லை என்பதை நடிகர், நடிகைகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை மனதில் வைத்துதான் நான் சினிமாவில் எனது இடத்தை பற்றி யோசிப்பது இல்லை.”

    இவ்வாறு சமந்தா கூறினார்.
    டுவிட்டரில், ஆபாச படங்கள் பரவுவது அருவருப்பாக இருக்கிறது. யாராக இருந்தாலும் சுயகட்டுப்பாடு வேண்டும் என்று நடிகை தன்சிகா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை டைரக்டு செய்த மீரா கதிரவன் தயாரித்து டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘விழித்திரு.’ இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண், தம்பி ராமய்யா, தன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில், டி.ராஜேந்தர் நடித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது தன்சிகா கூறியதாவது:-

    “இது, ஒரு இரவில் நடக்கிற கதை. படத்தில் 4 கதைகள் உள்ளன. அந்த 4 கதைகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் உச்சக்கட்ட காட்சி. இதில் காதல், மோதல், நகைச்சுவை, திகில் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன. சென்னை குடிசைவாசி பெண்ணாக நான் நடித்து இருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், சரோஜாதேவி.

    படத்தில், எனக்கு ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதில், துணிச்சலாக நடித்தேன். நான் ஏற்கனவே சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று இருப்பதால், சண்டை காட்சியில் நடிப்பது சுலபமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், பெண்கள் அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது, அவசியம். பாலியல் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, தற்காப்பு கலை உதவும்.



    பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால், முரட்டு சுபாவம் வந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். மனம், ஒரு நிலைப்படும். கோபம் குறையும். பதற்றம் ஏற்படாது.

    டுவிட்டரில், நடிகர்-நடிகைகளும் இருக்கிறார்கள். பொதுமக்களும் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சுயகட்டுப்பாடு வேண்டும். சர்ச்சைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமீப நாட்களாக டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவது, அருவருப்பாக இருக்கிறது.

    நான், எந்த விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை.”

    இவ்வாறு நடிகை தன்சிகா கூறினார்.

    பேட்டியின்போது நடிகர் கிருஷ்ணா, டைரக்டர் மீரா கதிரவன், ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், ஆர்.வி.சரண், இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் மற்றும் படக்குழுவினர் அருகில் இருந்தார்கள்.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவிëëலை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியதுபோலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகி தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகையும் நடுநடுங்க வைத்துள்ள அந்த புகைப்படங்களால் பல்வேறு நடிகைகளும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுடைய படங்களும் வெளிவந்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

    ஆனால், தன்னுடைய பக்கத்தில் வெளிவந்த புகைப்படங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பின்னணி பாடகி கதறி அழுது, தனது டுவிட்டர் பக்கத்தையே முடக்கிவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும், அவர் பெயரில் இன்னமும் பல பக்கங்கள் உருவாகி அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.



    இதனால், பாடகி ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது, அந்த பின்னணி பாடகி விரையில் வெளிநாடு சென்று செட்டிலாகப் போகிறாராம். அங்கு அவர் மனவியல் ரீதியாக சிகிச்சை எடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது கணவரை விவாகரத்து செய்துவிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

    பாடகியின் இந்த முடிவு திரையுலக வட்டாரத்தில் பலருக்கு நிம்மதியை கொடுத்திருந்தாலும், பாடகி பெயரில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனவே, மறுபடியும் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவருமோ? என்ற அச்சமும் அவர்கள் மனதில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 
    ராகவா லாரன்ஸ் விவசாயிகளுக்கு உதவுவதற்காக புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    வறட்சி காரணமாக பல்வேறு விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து வறுமையால் வாடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ், “விவசாயிகளின் உயிர் காப்போம் சொல்லாதே செய்” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளார்.

    இதன் மூலம் நிதி திரட்டி வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ராகவா லாரன்ஸ் இன்று ரூ.1 கோடி நிதி வழங்கினார். மற்றவர்களிடமும் நிதி திரட்டி அதை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.



    சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் ஆயக்குடியில் இறந்த விவசாயி கண்ணதாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். இதுபோல் மற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

    நிகழ்ச்சியில் ஆர்.பி.சௌத்ரி, பி.வாசு, அம்மா கிரியேன்ஸ் சிவா பலர் கலந்து கொண்டனர். இந்த அமைப்புக்கு அவர்களும் நன்கொடை வழங்கினார்கள்.
    ×