search icon
என் மலர்tooltip icon

    கார்

    513 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டு விவரம்!
    X

    513 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டு விவரம்!

    • ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விரைவில் களமிறங்க இருக்கிறது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக என்யாக் iV காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்த நிதியாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சந்தையில் எதுபோன்ற வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் என்யாக் iV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து எதிர்கால எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டமிடலில் ஸ்கோடா இறங்க இருக்கிறது.

    ஹூண்டாய், கியா, டாடா மற்றும் மஹிந்திரா போன்ற பிராண்டுகள் இந்திய சந்தையில் குறைந்த பட்சம் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விரைவில் களமிறங்க இருக்கிறது.

    "நாங்கள் என்யாக் மாடலில் இருந்து துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த நிதியாண்டில் என்யாக் மாடலை அறிமுகம் செய்து சந்தையை ஆய்வு செய்ய விரும்புகிறோம். சந்தையில் சாதகமான வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், அதிக எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி முடிவு எடுப்போம்," என்று ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் பீட்டர் சால்க் தெரிவித்துள்ளார்.

    ஸ்கோடா என்யாக் iV மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஃபோக்ஸ்வேகன் ID 4 மற்றும் ஆடி Q4 இ டிரான் போன்ற கிராஸ்ஓவர் மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய என்யாக் iV மாடல் கோடியக் காரை விட சற்றே சிறிய கார் ஆகும். ஆனாலும் இது இரண்டடுக்கு இருக்கைகள் கொண்ட ஐந்து பேர் பயணிக்கக்கூடிய கார் ஆகும்.

    புதிய ஸ்கோடா என்யாக் iV மாடலில் 77 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 125 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் 265 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டிவிடும். WLTP சான்றின் படி, முழு சார்ஜ் செய்தால் என்யாக் iV மாடல் 513 கிலோமீட்டர்கள் வரையிலான செயல்திறன் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×