search icon
என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி Fronx இந்தியாவில் அறிமுகம் - முன்பதிவு துவக்கம்
    X

    மாருதி சுசுகி Fronx இந்தியாவில் அறிமுகம் - முன்பதிவு துவக்கம்

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ்யுவி கூப் மாடல் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    • புதிய மாருதி சுசுகி Fronx மாடல் நெக்சா பிராண்டிங்கின் கீழ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் தனது புதிய Fronx பலேனோ சார்ந்த உருவாக்கப்பட்ட எஸ்யுவி கூப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி Fronx மாடலுக்கான முன்பதிவு துவங்கி விட்ட நிலையில், விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. மாருகி சுசுகி Fronx மாடல் மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டிங்கின் கீழ் நடைபெற இருக்கிறது.

    நெக்சா பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் காம்பேக்ட் எஸ்யுவி கூப் மாடலாக Fronx அமைந்துள்ளது. பலேனோ சார்ந்து உருவாகி இருக்கும் நிலையில், இந்த கார் ஹார்டெக்ட் மோனோக் பிளாட்ஃபார்ம்-ஐ பயன்படுத்துகிறது. சில பாடி பேனல்கள் தவிர இந்த காரில் அப்ரைட் நோஸ் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் உள்ளிட்டவை கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் சற்று திடமனாக இருக்கின்றன. இருபுறமும் பிரத்யேக ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய ரியர் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய Fronx மாடலின் அம்சங்களில் சில ஏற்கனவே பலேனோ ஹேச்பேக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை மாருதி சுசுகி Fronx 3995mm நீளம், 1550mm உயரம் மற்றும் 1765mm அகலமாக இருக்கிறது.

    காரின் உள்புறமும் பெரும்பாலான அம்சங்கள் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டேஷ்போர்டு, இருக்கை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இரு மாடல்களிலும் வெவ்வேறு டெக்ஸ்ச்சர் மற்றும் சில வேறுபாடுகள் இருக்கும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் மற்றும் ஒற்றை டர்போ பெட்ரோல் என்ஜின் - 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் யூனிட் 2017 வாக்கில் அறிமுகமான முந்தைய தலைமுறை பலேனோ மாடலில் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் ஸ்டாண்டர்டு யூனிட்களின் ஸ்போர்ட் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. இது பலேனோ RS டாப் எண்ட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. குறைந்த விற்பனை மற்றும் கடினமான புகை விதிகள் காரணமாக இந்த என்ஜின் திரும்பப் பெறப்பட்டது.

    தற்போது Fronx மாடலில் டர்போ யூனிட் மீண்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.2 லிட்டர் K சீரிஸ் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வருகிறது. சிட்ரோயன் C3, டாடா பன்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் போன்ற மாடல்களுக்கு புதிய மாருதி சுசுகி Fronx போட்டியாக அமையும்.

    Next Story
    ×