என் மலர்
ஆட்டோமொபைல்

ஓலா எலெக்ட்ரிக் தொழிற்சாலை
உலகின் மிகப்பெரும் இ ஸ்கூட்டர் உற்பத்தி ஆலை
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்கிறது.
உலகம் முழுவதும் தற்போது பேட்டரி சக்தியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இப்போது இந்த வாகனங்கள் விற்பனை உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வாடகை கார்களை இயக்கி வரும் ஓலா நிறுவனம் பேட்டரியால் இயங்கும் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க உள்ளது.
இதற்கான தொழிற்சாலையை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைத்து வருகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலையாக இருக்கும். இந்த ஆலையை அமைப்பதற்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 378 கால்பந்து மைதானத்தின் அளவுக்கு தொழிற்சாலை பரந்து விரிந்து உள்ளது.

தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி கூடம் மட்டுமே 150 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இந்த தொழிற்சாலைக்காக ரூ.2,400 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஆலையில் 2 வினாடிக்கு ஒரு மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆகும். இதன் படி ஆண்டுக்கு இரண்டு கோடி மோட்டார்சைக்கிள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும். ஆலையில் பெரும்பாலும் ரோபோட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தயாரிப்பு பணியில் 3 ஆயிரம் ரோபோட்கள் பயன்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் முதல் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் புது மாடலுக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Next Story