என் மலர்tooltip icon

    ராசிபலன்

    weekly rasipalan- சிம்மம் முதல் விருச்சிகம் வரை 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
    X

    weekly rasipalan- சிம்மம் முதல் விருச்சிகம் வரை 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    சிம்மம்

    புதிய சொத்துக்கள் சேரும் வாரம். ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் நான்காம் அதிபதி செவ்வாய் நிற்கிறார். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும்.

    வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி முதல் 14.8.2025 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு திரட்டுப்பால் வைத்து வழிபடவும்.

    கன்னி

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். புதியவற்றை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.

    பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலர் வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள் சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 14.8.2025 அன்று காலை 9.06 மணி முதல் 16.8.2025 அன்று காலை 11.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதிரசம் வைத்து வழிபடவும்.

    துலாம்

    திருப்பு முனையான வாரம். கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சேமிப்புகள் கூடும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக் கூடிய காலமாகும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

    16.8.2025 அன்று காலை 11.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.

    விருச்சிகம்

    தந்தையால் உயர்வு அடையும் வாரம். தந்தைக்கு காரக கிரகமான சூரியன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களின் தொழில் வளர வாழ்வாதாரம் உயர தந்தை உதவி செய்வார். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வெளிநாட்டு வணிகம், உணவுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் நல்ல பலன் தரும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

    Next Story
    ×