என் மலர்tooltip icon

    ராசிபலன்

    weekly rasipalan- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான வார ராசிபலன்
    X

    weekly rasipalan- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான வார ராசிபலன்

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    மேஷம்

    புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு செவ்வாய் சனி பார்வை. இந்த அமைப்பு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    தலைமைப் பண்பு மிகுதியாகும். கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குல கவுரவத்தை கட்டி காப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும்.

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். கோகுல அஷ்டமி அன்று வெண்ணை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    ரிஷபம்

    லாபகரமான வாரம். தன லாப ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. தீராத மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். பட்ட கடனும், நோயும் தீரும் காலமும் வந்து விட்டது. வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.

    ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும், மனதும் புத்துணர்ச்சியடையும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பங்குச் சந்தை ஆதாயம் கூடும். அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தொழில் முயற்சிக்கு ஏற்ற லாபம் நிச்சயம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.

    அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டா கலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடவும்.

    மிதுனம்

    மகிழ்ச்சியான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் தருவது கேந்திரங்கள். தற்போது மிதுன ராசிக்கு கேந்திர ஸ்தானங்கள் பலம் பெறுகிறது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான புதிய முயற்சிகள் திட்டங்கள் பலிதாகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏறபடும்.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். கோகுல அஷ்டமி அன்று வெண் பொங்கல் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    கடகம்

    சிறிய முயற்சியில் பெரிய தடைகள் அகலும் வாரம். ராசியில் சூரியன் நிற்பதால் தலைமைப்பதவி தேடி வரும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை வராது. வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு நல்ல மதிப்பும் கிடைக்கும். அரசு வருமானம் ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். பாக்கிய ஸ்தான சனி பகவான் புதிய தொழில் முதலீட்டிற்கு தூண்டினாலும் ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நல்லது. பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு, கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகலாம். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. உணவு கட்டுப்பாடு அவசியம். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு எள்ளுருண்டை படைத்து வழிபடவும்.

    Next Story
    ×