தொழில்நுட்பம்
கூகுள் க்ரோம்

ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

Published On 2020-06-04 08:27 GMT   |   Update On 2020-06-04 08:27 GMT
பயனர் விவரங்களை சட்டவிரோதமாக கையாண்டதாக கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



உபயோகிப்பாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற தேடுப்பொறி சேவையாக கூகுள் இருக்கிறது. இந்த தளத்தில் ‘இன்காக்னிட்டோ மோட்’ என்ற அம்சத்தில், ஒருவர் எதையாவது தேடும்போது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ‘இன்காக்னிட்டோ மோட்’ அம்சத்தில் பயனாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில் தான் தேடுகிறார்கள். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதும் அதில் பதிவாகாது. அந்த நம்பிக்கையை மீறும் வகையில் இப்போது அது கண்காணிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



இது தொடர்பாக கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37,500 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கலிபோர்னியா மாகாணம், சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில், கூகுள் கணினி அல்லது செல்போனை கொண்டுள்ள ஒவ்வொருவரிடம் இருந்து ரகசிய மற்றும் அங்கீகரிக்கப்படாத தரவு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியாது என கூறி உள்ளது.

மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல் தொடர்புகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தடுத்து, சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன அல்லது ஆதாயத்துக்காக சுரண்டப்படுகின்றன என்பதை அறிந்து கவலைப்படுகிறார்கள் என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News