தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ

Published On 2019-07-20 07:20 GMT   |   Update On 2019-07-20 07:20 GMT
இந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.



இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மே மாத இறுதி வரையிலான காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சந்தை நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அந்த வகையில் ஜியோ சேவையை பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 32.3 கோடியாக இருக்கிறது.



38.76 லட்சம் வாடிக்கையாளர்களுடன் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் 24,276 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

சமீபத்திய டிராய் அறிக்கையின் படி இந்தியாவில் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 116.23 கோடியில் இருந்து 116.18 கோடியாக குறைந்திருக்கிறது. மே 31 வரையிலான காலக்கட்டத்தின் படி இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்கள் மட்டும் 89.72 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். 10.28 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன. இதில் வோடபோன் ஐடியா 33.36 சதவிகிதம், ரிலைன்ஸ் ஜியோ 27.80 சதவிகிதம், பாரதி ஏர்டெல் 27.58 சதவிகிதம் மற்றும் பி.எஸ்.என்.எல். மற்றும் டாடா டெலி நிறுவனங்கள் முறையே 9.98 மற்றும் 0.30 சதவிகித பங்குகளை கொண்டிருக்கின்றன.
Tags:    

Similar News