தொழில்நுட்பம்

ஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரங்கள்

Published On 2019-06-19 06:55 GMT   |   Update On 2019-06-19 06:55 GMT
ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சி 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகள் மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

ஜெனீவாவிவ் லிப்ரா கூட்டமைப்பை உருவாக்கி இருக்கும் ஃபேஸ்புக், தனது கூட்டமைப்பில் இதுவரை 28 கூட்டாளிகளை இணைத்திருக்கிறது. இந்த கூட்டமைப்பு புதிய டிஜிட்டல் காயின் சேவையை நிர்வகிக்கும் என தெரிகிறது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகெரன்சி டிஜிட்டல் காயின் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய க்ரிப்டோகரென்சி தவிர புதிதாக கலிப்ரா என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட் போன்று இயங்கும் சேவையை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. கலிப்ரா ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சியை சேமித்து வைத்துக் கொண்டு, அவற்றை அனுப்பவோ அல்லது பயன்படுத்தவோ வழி செய்யும். கலிப்ரா ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் சேவைகளுடன் இணைக்கப்பட இருக்கிறது.



ஃபேஸ்புக் புதிய சேவையினை வங்கி கணக்கு வைத்திருக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்காதவர்களும் நிதி சேவைகளை பயன்படுத்த முதல் முறையாக வழி செய்ய இருக்கிறது.

லிப்ரா பரிமாற்றங்களுக்கான கட்டணம், மற்ற சேவைகளை விட குறைவாகவே இருக்கும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான கட்டண விவரங்களை வழங்கவில்லை. ஊழல்களில் சிக்கி பணத்தை இழப்போருக்கு அவரவர் இழக்கும் தொகையை திரும்பி வழங்குவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் லிப்ரா திட்டம் அதன் துவக்கக்கட்டத்தில் தான் இருக்கிறது என பேபால் மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீ சிவானந்தா தெரிவித்தார். நிதி நிறுவனங்களுடன் இத்திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஒருவேளை இத்திட்டத்திற்கு அதிகளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில் இது வெளியாகாமலும் போகலாம் என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News