தொழில்நுட்பம்

பல வருடங்களாக பயனர் விவரங்களை கசியவிட்ட விவகாரம் - சர்ச்சையில் சிக்கிய ஒன்பிளஸ்

Published On 2019-06-16 07:55 GMT   |   Update On 2019-06-16 07:55 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களின் மின்னஞ்சல் விவரங்களை கசியவிட்டதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.



ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) எனும் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை சர்வதேச அளவில் வால்பேப்பர்களாக வெளியிடுவதை ஒன்பிளஸ் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஒன்பிளஸ் சர்வெர் மற்றும் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலிக்கு இடையேயான லின்க் ஒன்றின் மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியானது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயன்படுத்தியவர்களின் மின்னஞ்சல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த பிழையை மே மாத துவக்கத்தில் ஒன்பிளஸ் தெரியப்படுத்திவிட்டு இதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டது. ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயனர்கள் வால்பேப்பர்ஸ் மெனு சென்று இயக்கலாம். இதனை இயக்க பயனர்கள் தஙகளின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அவரவர் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.



புகைப்படங்கள் தேர்வு செய்த பின், ஒன்பிளஸ் அவற்றை ஏ.பி.ஐ. மூலம் பொதுவெளியில் வெளியிடும். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பயன்படுத்தும் ஏ.பி.ஐ. கொண்டு மற்றவர்களும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த ஏ.பி.ஐ. open.oneplus.net எனும் இணைய முகவரியில் வெளியிடப்பட்டது.

இந்த பிழை எப்போது முதல் இருந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த பிழை, சேவை துவங்கப்பட்டது முதலே இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் எப்போதும் பயனர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் எங்களுக்கு வரும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மிக கவனமாக ஆய்வு செய்வோம் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏ.பி.ஐ.-களில் சத்தமில்லாமல் சில மாற்றங்களையும் ஒன்பிளஸ் மேற்கொண்டு இருக்கிறது. 

இந்த மாற்றங்களையும் எளிதில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. புதிய பிழை கண்டறியப்பட்டதன் மூலம் பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இது அந்நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News