தொழில்நுட்பம்

ஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்

Published On 2019-02-02 11:24 IST   |   Update On 2019-02-02 11:24:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழைக்கு அந்நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. விரைவில் பிழையை சரிசெய்வதற்கான அப்டேட் வெளியாகிறது. #Apple #FaceTime



ஆப்பிள் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழைக்கு ஆப்பிள் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஃபேஸ்டைம் செயலியில் அழைப்பு விடுத்தால், மறுப்பக்கம் அழைப்பை ஏற்காத நிலையிலும் அவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். இதுதவிர அழைப்பை மேற்கொள்வோர் மற்றவர்களது சாதனத்தின் கேமராவையும் இயக்க முடியும் என சிலர் தெரிவித்தனர்.

இந்நிலையில், "க்ரூப் ஃபேஸ்டைம் பாதுகாப்பு கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், இதற்கான மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. வரும் வாரத்தில் இதற்கான அப்டேட் வெளியாகும் என தெரிகிறது. பாதுகாப்பை கோளாறை முதலில் தெரியப்படுத்திய தாம்ப்சன் குடும்பத்தினருக்கு எங்களது நன்றிகள்.

பாதுகாப்பு கோளாறில் பாதிக்கப்பட்ட எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கவலையுற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சனையை சரிசெய்யும் வரை காத்திருந்தமைக்கு அனைவருக்கும் பாராட்டுக்கள்," என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



க்ரூப் ஃபேஸ்டைம் கோளாறு முதலில் அரிசோனாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கண்டறிந்தான். ஜனவரி 19 ஆம் தேதி தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்ளும் போது அவரது நண்பர் அழைப்பை ஏற்கவில்லை எனினும் அவரது உரையாடல்களை கேட்க முடிந்ததாக தெரிவித்தார்.

பின் சிறுவனின் தாயார் மிஷல் தாம்ப்சன் பாதுகாப்பு கோளாறு பற்றி ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். பின் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் வேகமாக பரவியது. ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஓ.எஸ். மோஜேவ் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தில் குறைபாடு ஏற்பட்டது.

"பிரச்சனை இருப்பதை உறுதி செய்ததும் எங்களது பொறியாளர் குழு க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை செயலிழக்க செய்துவிட்டு உடனடியாக பிழையை சரி செய்யும் பணிகளை துவங்கினர். எங்களது சேவைகளின் பாதுகாப்பு பற்றி எங்களது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்க அதிகளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்," என ஆப்பிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Similar News