தொழில்நுட்பம்

டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி.

Published On 2018-11-09 06:46 GMT   |   Update On 2018-11-09 06:46 GMT
எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #smartphone



எல்.ஜி. நிறுவனம் தென்கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. நிறுவனம் இன் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்க இருக்கிறது.

இதன் மூலம் புதிய ஸ்மார்ட்போன் நாட்ச் எதுவும் இல்லாமல் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போனிற்கென எல்.ஜி. இரண்டு காப்புரிமைகளை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி ஒரு ஸ்மார்ட்போனில் வழக்கமான திரையும் மற்றொன்றின் ஓரங்களில் வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

இரண்டு மாடல்களிலும் எல்.ஜி. உற்பத்தி செய்த வளையும் தன்மை கொண்ட OLED பேனல்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரண்டு காப்புரிமைகளும் கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 2ம் தேதிகளில் இவை அச்சிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகைப்படம் நன்றி: Letsgodigital

காப்புரிமை புகைப்படங்களின் படி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவில் வெவ்வேறு இடங்களில்- நடுவே, இடது புற ஓரம், வலது புற ஓரம் அல்லது மத்தியில் என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும் என தெரிகிறது. இதில் இரண்டு கேமரா சென்சார்களும், மற்ற இதர சென்சார்களும் வழங்கப்படுகிறது.

புதிய காப்புரிமை மூலம் எல்.ஜி. நிறுவனம் 100 சதிவிகதம் முழுமையான டிஸ்ப்ளேவை வழங்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த காப்புரிமையின் மூலம் ஸ்மார்ட்போனில் ஸ்லைடர் அல்லது பாப் அப் போன்ற மெக்கானிக்கல் அம்சங்களை புகுத்த வேண்டிய அவசியமற்றதாக இருக்கிறது.

எல்.ஜி. போன்றே சாம்சங் நிறுவனமும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News