தொழில்நுட்பம்

இந்தியர்கள் தினமும் எவ்வளவு டேட்டா பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

Published On 2018-09-29 08:10 GMT   |   Update On 2018-09-29 08:10 GMT
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினசரி அடிப்படையில் பயன்படுத்தி வரும் டேட்டா விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தினமும் 1 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நெயில்சன் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி சிலகாலத்திற்கு முன் இந்தியர்கள் மாதாந்திர அடிப்படையில் அதிகபட்சம் 4 ஜி.பி. டேட்டா மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் அவர்கள் தினமும் அதிகபட்சம் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிக குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதால் உலகளவில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நெயில்சன் ஸ்மார்ட்போன் 2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அதிவேக 4ஜி இண்டர்நெட், விலை குறைந்த மொபைல் போன் மாடல்கள் மற்றும் அழைப்பு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கத் துவங்கியது," என நெயில்சன் இந்தியாவின் தலைவர் அபிஜித் மடாகர் தெரிவித்தார். 



இந்திய சந்தையில் ஏற்படும் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ரூ.5,000 பட்ஜெட்டில் புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

"திடீரென மலிவு விலை புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமானதால், புதிய பயனர்கள் தங்களது ஃபீச்சர்போன்களை ஸ்மார்ட்போன் மாடல்களாக மாற்றிக் கொண்டனர்," என மடாகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த 15 முதல் 18 மாதங்களில் டேட்டா பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகபட்ச பயன்பாடு டேட்டா அதிகம் எடுத்துக் கொள்ளும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் குரோம் போன்றவற்றில் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News