தொழில்நுட்பம்
ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 27 லட்சம் பேர் தகவல்கள் திருடப்பட்டுள்ளன
ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் 27 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசல்ஸ்:
ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 27 லட்சம் பேர் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் பயன்படுத்தப்பட்டதை ஃபேஸ்புக் உறுதி செய்துள்ளது. இத்தகவலை ஐரோப்பிய யூனியன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தகவல் திருட்டு குறித்து ஃபேஸ்புக் அனுப்பியிருக்கும் கடிதத்தில் இத்தகவல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க ஃபேஸ்புக்கிடம் கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் திருட்டு மட்டுமின்றி இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்த தகவல்களும் ஃபேஸ்புக் அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க புதிய செட்டிங்ஸ் வழங்கியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியானது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா சேகரித்த தகவல்களில் 81% அமெரிக்க பயனர்களுடையது என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா மற்றும் ப்ரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 11 லட்சம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5.6 லட்சம் பயனரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.