தொழில்நுட்பம்
கோப்பு படம்

சுமார் ஒன்பது கோடி ஃபேஸ்புக் வாசிகள் தகவல் திருட்டு

Published On 2018-04-05 06:54 GMT   |   Update On 2018-04-05 06:54 GMT
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் பயன்படுத்தி வருவோரில் சுமார் ஒன்பது கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்:

உலக அளவில் புகழ் பெற்ற சமூக வலைத்தளமாக இருந்து, தகவல் திருட்டு சம்பவத்தில் பெரும் பிரச்சனைகளை ஃபேஸ்புக் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், தனது பயனரின் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. அந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து வந்தது. 

அது ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை கொடுத்தது தெரியவந்தது. முதலில் 5 கோடி பேர் தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துடன் உள்ள உறவை ஃபேஸ்புக் முறித்து கொண்டது. 



இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேருடைய தகவல்களை திருடி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்துள்ளார். 

வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க புதிய செட்டிங்ஸ் வழங்கியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா சேகரித்த தகவல்களில் 81% அமெரிக்க பயனர்களுடையது என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா மற்றும் ப்ரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 11 லட்சம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5.6 லட்சம் பயனரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

எங்கள் தளத்தில் இருந்து தகவல் திருடப்பட்டு இருப்பதால் அதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று ஃபேஸ்புக்கின் நிறுவன தலைவர் சூக்கர்பர்க் கூறி இருந்தார். சில நிறுவனங்களை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News