தொழில்நுட்பம்

ஜூன் 4-இல் ஆப்பிள் நிகழ்வு

Published On 2018-03-14 13:11 IST   |   Update On 2018-03-14 13:11:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் 29-வது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி துவங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:

ஆப்பிள் நிறுவனம் 29-வது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மெக் எனர்ஜி கன்வென்ஷன் மையத்திலேயே இந்த ஆண்டும் டெவலப்பர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். மற்றும் ஓ.எஸ். X குறித்த தகவல்களும், ஐ.ஓ.எஸ். 12, மேக் ஓ.எஸ். 10.14, வாட்ச் ஓ.எஸ். 5 மற்றும் டி.வி. ஓ.எஸ். 12 அப்டேட்கள் குறித்த தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் அனிமோஜி அம்சம் ஃபேஸ்டைமில் சேர்க்கப்பட்டு, ஐபேட் செயலிகளில் டேப்களை வழங்கலாம் என்றும் கூறப்பட்டது.

முன்னதாக வெளியான தகவல்களில் பெரும்பாலான முக்கிய அம்சங்களை தள்ளி வைத்து அவற்றை 2019-ம் ஆண்டு வழங்கியும் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் அதிக கவனம் செலுத்தலாம் என கூறப்பட்டது. இத்துடன் குறைந்த விலை ரெட்டினா மேக்புக், மேம்படுத்தப்பட்ட என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை ஆப்பிள் இம்முறை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியானது.

2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கான நுழைவு சீட்டு விற்பனை இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நுழைவு சீட்டு கட்டணம் 1599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,04,006) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் காரணத்தால், கலந்து கொள்வோர் பட்டியல் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதோர், விழாவை ஆப்பிள் ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் டி.வி.க்கான WWDC செயலி மூலம் நேரலையில் பார்க்க முடியும். ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டின் சிறப்புரை ஜூன் 5-ம் தேதி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது.

Similar News