இக்கரை கொட்டியூர் கோவில்
வருடத்துக்கு 28 நாட்கள் மட்டுமே திறக்கும் சிவன் கோவில்
- மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது.
- திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தியாவில் ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் கொட்டியூர் சிவன் கோவில். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது, கொட்டியூர் என்னும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் வருடத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டிற்காக திறக்கப்படுகிறது.
தல வரலாறு
பார்வதி தேவியின் தந்தை தட்சன். இவன், சிவபெருமானை அழைக்காமலேயே இரண்டு பெரும் வேள்விகளை வெற்றிகரமாக நடத்தினான். அவ்வாறு மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' எனும் வேள்வியை நடத்த முடிவு செய்தான். அதில் கலந்து கொள்ள சிவபெருமானை தவிர தேவர்கள் என மற்ற அனைவரையும் அழைத்திருந்தான். தன் தந்தை நடத்தும் மாபெரும் வேள்வியில் தன்னுடைய கணவரான சிவபெருமானை அழைக்கவில்லையே என்று மிகவும் வருந்தினார், பார்வதி தேவி.
அதேநேரம், அந்த வேள்வியில் கணவருடன் கலந்து கொள்ளவும் விரும்பினார். பார்வதி தேவி, தன் எண்ணத்தை சிவபெருமானிடம் கூறினார். அதற்கு சிவபெருமான், ''நாம் அங்கு செல்ல வேண்டாம். அழைப்பில்லாமல் சென்றால் அவமானமே கிடைக்கும்'' என்றார். ஆனால் பார்வதி தேவி வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சிவபெருமான் சொன்னதை கேட்காமல் தனியாகவே வேள்வி நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது. தட்சன், பார்வதியையும், சிவபெருமானையும் அவமதித்து பேசினான். இதனால் மிகவும் மனம் வருந்திய பார்வதி தேவி, தனது உயிரை அங்கேயே மாய்த்துக் கொண்டார். இதை அறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வேள்வி நடத்திக் கொண்டிருந்த தட்சனின் தலையை துண்டாக வெட்டி வீசினார். தட்சனின் தலையை வெட்டிய பிறகும் சிவபெருமானின் கோபம் அடங்கவில்லை. பின்பு கோபம் தணிந்து, சிவபெருமான் ஓரிடத்தில் சுயம்புவாக தோன்றினார். அந்த இடம்தான் கேரளாவில் இருக்கும் கொட்டியூர் என்கிறது தல புராணம். இந்த தலத்திற்கு திருசேருமன்னா என்ற பெயரும் உண்டு.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த இடம் என்பதால் 'கூடியூர்' என அழைக்கப்பட்டு, பிறகு 'கொட்டியூர்' என்று மாறிப்போனது. கொட்டியூர் மட்டுமல்ல அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் தட்சன் நடத்திய யாகத்துடன் தொடர்புடையவை என சொல்லப்படுகின்றன. தட்சனின் யாகத்திற்கு வந்த பார்வதி தேவி, யாகம் நடந்த இடத்தை தூரத்தில் இருந்து கண்டதால் அவ்விடம் 'நீண்டு நோக்கி' என்றும், தட்சனின் யாகத்தை காண நடந்து வந்த பார்வதி தேவியின் நடை வேகம் குறைந்த இடம் என்பதால் 'மந்தன்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
கொட்டியூரில் மாவேலிப்புழை எனப்படும் பாவலி ஆறு ஓடுகிறது. இதன் இரண்டு கரைகளிலும் சிவபெருமானுக்கு இரண்டு கோவில்கள் அமைந்துள்ளன. ஆற்றின் இக்கரையில் அமைந்துள்ள கோவிலை 'இக்கரை கொட்டியூர்' என்றும், அடுத்த கரையில் அமைந்துள்ள கோவிலை 'அக்கரைக் கொட்டியூர்' என்றும் அழைக்கின்றனர். இவற்றில் அக்கரை கொட்டியூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்படுகிறது. அதாவது வைகாசி மாதத்தில் நடைபெறும் மகோற்சவ காலத்தின்போது மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது.
மற்ற நாட்களில், பக்தர்கள் சிவபெருமானை தரிசிப்பதற்காக அமைக்கப்பட்ட கோவில் தான், இக்கரைக் கொட்டியூர் சிவன் கோவில். இக்கோவில் சற்று உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல பல படிகளை ஏறி செல்ல வேண்டும். அங்கு இடப்பக்கம் பார்வதி தேவி சிலையும், வலப்பக்கம் சிவன் சிலையும் உள்ளன.
அக்கரை கோவில், 'திருவஞ்சிற' எனும் சிறு குளத்தின் மீது கருங்கல்லால் ஆன மேடைகளுடன் அமைந்துள்ளது. இந்த இடம் தட்சன் நடத்திய வேள்வி குண்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு 'மணித்துறை' எனும் மேடையில் சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருள்கிறார். சற்று தூரத்தில் பார்வதி தேவி அக்னிப்பிரவேசம் செய்த மேடை ஒன்று உள்ளது. அதற்கு 'அம்மாறக்கல்' என்று பெயர்.
கோவிலுக்கு சொந்தமான நகைகள், கரிம்பனக்கல் கோபுரம் என்னும் இடத்தில் உள்ள பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டகத்தின் நான்கு சாவிகள் நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரிடமும் இருக்கும். இவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும். இந்த பெட்டகத்தை பாம்புகள் பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது.
திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் இந்த ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த கலசங்களுக்கு 'பண்ணாரம்' என்றும், இந்த உற்சவத்திற்கு 'பண்ணாரம் எழுந் நலத்து வைபவம்' என்றும் பெயர். இந்த வைபவத்தை நடத்துபவர்கள் 'குடிபதிகள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
அக்கரை கொட்டியூர் கோவில்
வைகாசி மகோற்சவ விழா
அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளன்று தொடங்கி ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் வரை 28 நாட்கள் வைகாசி மகோற்சவம் நடைபெறும். இதில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். திருவிழா சமயங்களில் மட்டும் அக்கரை கொட்டியூரில் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை சுற்றிலும் குடில் அமைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறந்த வெளியிலேயே ஈசன் வாசம் செய்கிறார். பக்தர்கள் சிவனை வழிபடும் இடத்திற்கு 'திருவஞ்சரா' என்று பெயர். இந்த இடத்தை எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர் 'தட்சனின் ரத்தம்' என கருதப்படுகிறது.
அமைவிடம்
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், தலச்சேரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கொட்டியூர் இருக்கிறது.