வழிபாடு

Mahalaya amavasai அன்று இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்யலாம்

Published On 2025-09-16 13:00 IST   |   Update On 2025-09-16 13:00:00 IST
  • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
  • அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.

பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள்.

இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிட கூடாது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.

தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

நமது பித்ருகளிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

Tags:    

Similar News