வழிபாடு

அரசூர் இடைச்சிவிளையில் உள்ள குமரன்விளை தசராக்குழுவினர் சாமி வேடமணிந்து வீதிஉலா சென்றபோது எடுத்த படம்.

முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம்- குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

Published On 2025-10-02 08:12 IST   |   Update On 2025-10-02 08:12:00 IST
  • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குலசேகரன்பட்டினம்:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.

நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News