கோப்பு படம்.
பல்கலைக்கழக என்ஜினீயருக்கு கத்தி குத்து
- புதுவை அருகே ரெட்டியார்பாளையத்தில் பல்கலைக்கழக என்ஜினீயரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அப்போது கத்தியோடு வந்த வசந்தராஜ் திடீரென கஜேந்திரனை வழிமறித்து கத்தியால் தலையில் வெட்ட முயன்றார்.
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையத்தில் பல்கலைக்கழக என்ஜினீயரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது54). இவர் புதுவை தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் மரியாள்நகர் நலவாழ்வு சங்க சேர்மனாகவும் உள்ளார்.
இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் வசந்தராஜ் என்பவர் அடிக்கடி மது குடித்து விட்டு குடிபோதையில் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் பிரச்சினை செய்வது வழக்கம். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கஜேந்திரனிடம் முறையிட்டனர்.
இதையடுத்து வசந்த ராஜை அழைத்து கஜேந்திரன் கண்டித்தார். இதனால் கஜேந்தின் மீது வசந்தராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார். வசந்தராஜ் மது குடித்து விட்டு கஜேந்திரனின் வீட்டு கதவை தட்டினார். ஆனால் கஜேந்திரன் கதவை திறக்கவில்லை.
இந்த நிலையில் கஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்ல தயாரானார். அப்போது கத்தியோடு வந்த வசந்தராஜ் திடீரென கஜேந்திரனை வழிமறித்து கத்தியால் தலையில் வெட்ட முயன்றார். இதனை சுதாரித்துக்கொண்டு கஜேந்திரன் தலையை சாய்த்துக்கொண்டார். ஆனால் சத்தி கஜேந்திரனின் மார்பில் வெட்டியது.
இதனால் நிலைகுலைந்து போன கஜேந்திரன் அலறல் சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வந்ததால் வசந்தராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பின்னர் கத்தி வெட்டில் காயமடைந்த கஜேந்திரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தராஜை தேடி வருகிறார்கள்.