புதுச்சேரி

புதுவை மத்திய ஜெயிலில் கைதிகள் பயிரிட்ட மஞ்சள் அறுவடை

Published On 2023-01-17 06:07 GMT   |   Update On 2023-01-17 06:07 GMT
  • பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது.
  • சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை 2 ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.

இதற்காக சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 2 வாரத்தில் விவசாய நிலமாக சிறைவாசிகள் உருவாக்கினர்.

அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழச்செடிகள், 50 வகையான மூலிகை செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர்.

சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தலைமையில் அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து காய்கறிகள் மரம் மற்றும் பழ வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்பட்டு சொசைட்டி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு மஞ்சள் கிழங்கு சிறைவாசிகள் உருவாக்கிய ஒரு கிழக்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியாகும் மஞ்சள் அனைத்தையும் பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்தார்.

இங்கு சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

மேலும் தை பொங்கலையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Tags:    

Similar News