புதுச்சேரி

தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்கக் கூடாது- கவர்னர் தமிழிசை பேட்டி

Published On 2023-05-30 04:31 GMT   |   Update On 2023-05-30 04:31 GMT
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
  • தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.

எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.

மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.

ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.

Tags:    

Similar News