புதுச்சேரி

கோப்பு படம்.

எதிர்கட்சிகள் இல்லாத நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார்-அன்பழகன் கருத்து

Published On 2023-03-15 14:17 IST   |   Update On 2023-03-15 14:17:00 IST
  • தி.மு.க. உட்பட சில கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிறிய அளவில் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனம் காத்தனர்.
  • எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கவர்னர் உரைக்கு சம்பந்தமே இல்லாத மதுபான விற்பனைகள் குறித்து பேசியது வியப்பாக உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் உரை, பட்ஜெட் உரையின் போது கவர்னர், முதல்-அமைச்சர் உரை நிகழ்த்திய போது பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உட்பட சில கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிறிய அளவில் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனம் காத்தனர்.

இதிலிருந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியே இல்லாத நிலையை எங்கள் கூட்டணி முதல்-அமைச்சர் உருவாக்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு நிறைவேற்றி உள்ளதை தி.மு.க. ஏற்றுக்கொண்டு அமைதி காத்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கவர்னர் உரைக்கு சம்பந்தமே இல்லாத மதுபான விற்பனைகள் குறித்து பேசியது வியப்பாக உள்ளது. மாநில வருவாய்க்காக புதிதாக மதுபான விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்குவது தவறு என்றும் இதனால் மாநிலம் கெட்டுவிடும் என்கிறார்.

அவர் பத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை பினாமி பெயரில் பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறார். அதிக மதுபான கடைகள் திறப்பதால் தனது மதுபான கடைகள் வருவாய் குறைந்துவிடும் என்ற தனது சுயநல சிந்தனையை சட்டமன்றத்தில் பொதுநல நோக்கோடு பேசுவதாக புகுத்தியுள்ளார்.

பொது நோக்கோடு எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது உண்மையாக இருந்தால் அவர் பினாமி பெயரிலும் வாடகை அடிப்படையிலும் நடத்தப்படும் மதுபான கடை உரிமைகளில் ஒன்று, இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற கடைகளை அரசிடம் திருப்பிக்கொடுக்க முன்வர வேண்டும்.

கவர்னர் உரையில் அரசின் திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும், வருவாய் பெருக்கத்தையும்,நிதி மேலாண்மையும், சமூக சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகள் குறித்து பேசாமல் மதுபான விற்பனை குறித்து பேசி தனது ஜனநாயக கடமையை சிறப்பாக எதிர்க்கட்சித் தலைவர் நடத்தியுள்ளார். இதுதான் திராவிட மாடலா என மக்கள் வினவுகின்றனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News