கோப்பு படம்.
தொழிலதிபர் மயங்கி விழுந்து சாவு
- நெட்டப்பாக்கம் அருகே தொழிற்சாலையை பார்வையிட சென்ற தொழிலதிபர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் தயாளமூர்த்தியை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே தொழிற்சாலையை பார்வையிட சென்ற தொழிலதிபர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுவை ரெட்டியார்பாளையம் பொன் நகரை சேர்ந்தவர் தயாள மூர்த்தி (வயது52). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தயாளமூர்த்தி நெட்டப்பாக்கம் அருகே ஏரிபாக்கத்தில் தெர்மாகோல் புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. ஆனால் இதற்காக அவர் எந்த மருத்துவ சிகிச்சையும் பெறவில்லை.
இந்த நிலையில் தயாளமூர்த்தி வீட்டில் வைத்திருந்த செல்போனை காணாமல் மிகுந்த வேதனையில் இருந்தார். பின்னர் மதியம் தொழிற்சாலையை பார்வையிட சென்றார். அப்போது 6 மணி அளவில் தொழிற்சாலையில் தயாளமூர்த்தி திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் தயாளமூர்த்தியை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தயாள மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது உறவினர் பரணிதரன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.