புதுச்சேரி

புதுவை சினிமா தியேட்டரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- சித்தப்பா மீது புகார்

Published On 2022-08-04 10:26 IST   |   Update On 2022-08-04 10:26:00 IST
  • மாணவி, உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். ஆன்லைனில் படிக்க மொபைல்போன் தேவைப்பட்டுள்ளது.
  • மாணவியின் சித்தப்பா, ‘ஐபோன்’ வாங்கித் தருவதாகவும், சினிமா பார்க்க போகலாம் என்றும் கூறி, அழைத்து வந்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை-கடலூர் சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் நடிகர் சந்தானம் நடித்துள்ள 'குலுகுலு' படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் பகல் காட்சி திரையிடப்பட்டது.

அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க' என பதறியடித்து ஓடி கழிவறைக்குள் புகுந்து கதவை பூட்டி, கதறிக் கொண்டே இருந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த 35 வயது நபர், அப்பெண் என்னுடன் வந்தவர் தான் மனநிலை சரியில்லாமல் கழிவறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். நான் அவருடைய சித்தப்பா. அப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம் என தெரிவித்தார்.

பதட்டம் அடைந்த மக்கள் மற்றும் தியேட்டர் ஊழியர்கள், அப்பெண்ணை வெளியே வருமாறு கதவை தட்டினர். அவருடன் வந்ததாக சொன்னவரும் அப்பெண்ணின் பெயரை சொல்லி கூப்பிட்டபடியே இருந்தார். ஆனால், கழிவறையின் உள்ளே இருந்த அப்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக கதறி அழுதபடியே இருந்தார். தகவல் அறிந்து வந்த உருளையன் பேட்டை போலீசார், கழிவறைக்குள் இருந்த பெண்ணிடம் பேசினர்.

'போலீஸ் வந்துள்ளோம். எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து வைக்கிறோம். வெளியே வந்து புகார் கொடுங்கள்' என கூறினர். இதையடுத்து அப்பெண் வெளியே வந்தார். அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார், தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.

'தன்னை அழைத்து வந்த சித்தப்பா பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரிடமிருந்து தப்பிக்கவே கழிவறைக்குள் சென்று பூட்டிக் கொண்டேன். அவருடன் சென்றால் என் கற்புக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லை' என கண்ணீர் விட்டு கதறினார்.

இதையடுத்து போலீசார், அந்த நபரை கவனித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட இளம்பெண் நகர பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., பிசியோதெரபி படித்து வருகிறார். அவரது பெற்றோர் இருவரும் சென்னையில் கூலி வேலை செய்து, மகளை படிக்க வைக்கின்றனர்.

மாணவி, உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். ஆன்லைனில் படிக்க மொபைல்போன் தேவைப்பட்டுள்ளது. அவரது சித்தப்பா, 'ஐபோன்' வாங்கித் தருவதாகவும், சினிமா பார்க்க போகலாம் என்றும் கூறி, அழைத்து வந்துள்ளார்.

ஆனால் சித்தப்பாவின் எண்ணம் வேறுவிதமாக இருந்துள்ளது. அந்த மாணவியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டு கழிவறைக்குள் மறைந்து தப்பி உள்ளார். மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட அவரது சித்தப்பா, கட்டிட காண்டிராக்டராக உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மகள் உறவுமுறை கொண்ட பெண்ணிடம், பொது இடத்தில் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News