புதுச்சேரி

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு குறைந்தது ஏன்?

Published On 2024-04-21 08:45 GMT   |   Update On 2024-04-21 08:45 GMT
  • நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.
  • ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் 78.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த தேர்தலை காட்டிலும் 2.35 சதவீதம் குறைவாகும்.

மொத்தமுள்ள 10,23,699 களில் 8,07,724 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.

வாக்கு பதிவு குறைந்தது குறித்து புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

ஓட்டு பதிவு குறைவிற்கு வெயிலை ஒரு காரணமாக சொன்னாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் படிப்பறிவு இல்லாத மக்கள் திரண்டு வந்து ஓட்டளிக்கின்றனர். ஆனால் நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.

மாநிலத்தின் கல்வியறிவு 85.8 சதவீதம் உள்ளது. அப்படி இருந்தாலும் நகர பகுதியில் வசிப்பவர்கள் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளிக்க தயக்கம் காட்டுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பதிவில் சரிவை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ், சிங்கப்பூர், அரபு நாடுகளில் பலரும் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும் எந்த ஒரு தேர்தலிலும் புதுச்சேரிக்கு வந்து ஓட்டளிப்பதில்லை. இப்போது இவர்கள் கோடை விடுமுறைக்காக தங்களது குடும்பத்தினரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று விட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினரும் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாக ஓட்டு பதிவு சரிந்து விட்டது. அதுபோல, 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயில பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஓட்டு போட ஒருநாள் மட்டுமே விடுமுறை என்பதாலும் இவர்களில் பலர் ஓட்டளிக்க வில்லை.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஓட்டுப்பதிவுக்கு வர நினைத்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள ஒருவர் ஓட்டளித்துவிட்டு மறுநாளே எப்படி டெல்லி செல்ல முடியும்? இதுபோல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை ஏற்க முடியாது. ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News