புதுச்சேரி

புதுவையில் பட்டா கத்தியுடன் வலம் வரும் வாலிபர்கள்- பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

Published On 2023-04-18 10:23 IST   |   Update On 2023-04-18 10:23:00 IST
  • கடந்த 1-ந்தேதி புதுவை திடீர் நகரில் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பொதுமக்கள் பீதியில் நடைபயிற்சியை பாதியில் கைவிட்டு சென்றனர்.

புதுச்சேரி:

புதுவை கடற்கரை சாலையில் அதிகாலையிலும், இரவிலும் மக்கள் நடை பயிற்சி செல்வது வழக்கம்.

நேற்று இரவு பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது பொது கழிப்பிடம் அருகே ஒருவர் 3 அடி நீள பட்டா கத்தியுடன் மிரட்டும் தோணியில் சுற்றி வந்தார். இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாலிபர் கடற்கரை சாலையில் பலூன் விற்கும் நரிக்குறவர் இன பெண்கள், குழந்தைகள் மத்தியில் கத்தியை காட்டி, என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது, என ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், கத்தியை தரையில் தேய்த்து நெருப்பு பொறி பறக்க வைத்தார். யாரோ சிலரை தகாத வார்த்தைகளால் திட்டி, நாளை இதே கத்தியால் தலையில் ஒரே வெட்டு என ஆத்திரத்தோடு பேசினார். இதைக்கண்ட பொதுமக்கள் பீதியில் நடைபயிற்சியை பாதியில் கைவிட்டு சென்றனர்.

இதுகுறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்கு முன்பு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டாக் கத்தியுடன் வாலிபர் சுற்றிய வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல புதுவை திடீர் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 2 அடி நீள பட்டாக்கத்தியை தனது பேண்ட்டில் இருந்து உருவி எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 1-ந்தேதி புதுவை திடீர் நகரில் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைதான 17 வயது சிறுவனின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பட்டா கத்தியுடன் சிறுவன் இருக்கும் ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இவற்றை பேஸ்புக் பக்கத்திலும் சிறுவன் வெளியிட்டுள்ளார்.

சிறுவன் மீது ஏற்கனவே ஆயுதம் வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிதாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

புதுவையில் இளைஞர்களும், வாலிபர்களும் பட்டாக்கத்திகளுடன் சர்வசாதாரணமாக சாலைகளில் நடமாடுவது, சமூகவலைதளத்தில் பதிவிடுவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Similar News