புதுச்சேரி

கவனக்குறைவான சிகிச்சையால் கால் பாதிப்பு: பெண்ணுக்கு ரூ.3½ லட்சம் நஷ்டஈடு- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2023-09-20 09:08 GMT   |   Update On 2023-09-20 09:08 GMT
  • கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.
  • வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறமுகம். அவரது மனைவி அமுதா (வயது 53). இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு வலது கால் முட்டியின் பின்புறம் நீர்க்கட்டி ஏற்பட்டது.

இதனை சரி செய்ய இவர், புதுவை புஸ்சி வீதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து அவரை கடந்த 6-9-2006 அன்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து நீர்க்கட்டியை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால் அவரது வலது கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.

இதனால் அதிர்ச்சிய டைந்த அமுதா 2007-ம் ஆண்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தனியார் டாக்டரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடு காரணமாக தனக்கு பல்வேறு கஷ்டங்கள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தவழக்கு விசாரணை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைபாடு உள்ளதாக கருதி அமுதாவுக்கு ரூ.2 லட்சத்துக்கு 50 ஆயிரமும், மன உளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தீர்ப்பின் நகலை பெற்ற 45 நாட்களுக்குள் அமுதாவுக்கு நஷ்டஈடு வழங்கா விட்டால் தீர்ப்பு தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News