புதுச்சேரி

புதுச்சேரி-தமிழக எல்லையில் ரூ.3 ½ கோடி சிக்கியது

Published On 2024-03-23 03:44 GMT   |   Update On 2024-03-23 03:44 GMT
  • தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பணம் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டது.

புதுச்சேரி:

பாராளுமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரி-தமிழக எல்லை பகுதிகளில் காவல் துறையினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ஜிப்மர் எல்லையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் தேர்தல் துறை பறக்கும் படையினரும் காவல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் தனியார் வாகனம் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில் கோடி கணக்கில் கட்டுக்கட்டாக ரூ. 500 புதிய நோட்டுகளும் பழைய நோட்டுகளும் இருந்தன.

இவற்றிற்கு உரிய ஆவணங்களை வாகனத்தில் இருந்தவர்களிடம் இல்லை. அவர்கள் வைத்திருந்த ரசீதில் ஜனவரி 21-ந் தேதி பணம் எடுத்ததற்கான ஆதாரம் இருந்தது.

ஆனால் இன்று வரை பணத்தை ஏ.டி.எமில் நிரப்பாமல் வாகனத்தில் வைத்து சுற்றியது ஏன் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் வாகனத்தையும், அதில் இருந்த 2 நபர்களையும் புதுச்சேரி கணக்கு மற்றும் கருவுலாக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ 3 கோடியே 47 லட்சம் இருப்பது தெரிய வந்தது. மேலும் ரூ 98 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பியதாகவும் ரூ.1 கோடி வங்கி அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒட்டு மொத்தமாக ரூ.5 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் செய்ய இருந்த நிலையில் ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டது.

வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு உரிய ஆவணங்கள் காண்பித்தால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தய்யா தெரிவித்தார்.

Tags:    

Similar News