புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிக்கி 57 பேர் காயம்
- கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
- படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு பிறக்கும் உற்சாகத்தில் நள்ளிரவில் மது போதையில் இளைஞர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளில் நகர சாலைகளில் வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இந்த நிலையில் கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அந்த வகையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 28 பேரும், கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 8 பேரும் சிகிச்சை பெற்றனர். இதை தவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பலர் சிகிச்சை பெற்றனர்.
புதுவையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பொருத்தி, ஒலி பெருக்கி அமைத்து, போக்குவரத்து போலீசார் இருந்த இடத்தில் இருந்த படியே அனைத்து சந்திப்புகளையும் கண்காணிக்க முடியும்.
சிறிய மாநிலமான புதுவையில் இவற்றுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏனோ அவை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.