புதுச்சேரி

ஜிப்மர் பெண் டாக்டருக்கு செல்போனில் ஆபாச மெயில்... விசாரணைக்கு கவர்னர் தமிழிசை உத்தரவு

Published On 2024-01-11 07:02 GMT   |   Update On 2024-01-11 07:02 GMT
  • ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.
  • கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

புதுச்சேரி:

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். எம்.டி. உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.

ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.

போலியான ஐ.டி. மூலம் வந்த அந்த மெயிலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் தனது அறையில் தனிமையாக சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி மருத்துவர் படிப்பை முடிக்க முடியாது. தேர்ச்சி பெற்றுள்ள எம்.டி. முதலாம் ஆண்டு படிப்பில் தொடர முடியாது என கூறப்பட்டிருந்தது.

இதேபோல மேலும் சில மருத்துவ மாணவிகளுக்கும் மெயில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம், ஜிப்மரில் உள்ள பெண்கள் வன்கொடுமை பிரிவு, சைபர் கிரைம் ஆகியோருக்கு மெயில் மூலம் புகார் அளித்தார். 3 மாதமாகியும் இந்த புகாரின்மீது நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து கவர்னர் தமிழிசைக்கும் அந்த பெண் டாக்டர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கவர்னர் தமிழிசை பெண் டாக்டரின் இணையதள பக்கத்தில் உறுதியளித்தார். கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது அந்த மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags:    

Similar News