புதுச்சேரி

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஜி.எஸ்.டி தொகை ரூ.55 ¾ லட்சம் கையாடல் செய்த மின்துறை ஊழியர் கைது

Published On 2022-09-15 16:02 IST   |   Update On 2022-09-15 16:02:00 IST
  • மின்துறை அலுவலகத்தில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
  • ஊழியரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் மின்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து சம்மன் ஒன்று வந்தது. அதில் கடந்த 4 வருடங்களாக ஜி.எஸ்.டி வரி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் மின்துறை அலுவலகம் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பண பரிவர்த்தனைக்கான அறிக்கையை பெற்று ஆய்வு செய்தனர். அதில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து மின்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மின்துறை அலுவலக வருவாய் தணிக்கையாளர் மோகன்குமார் ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணமோசடியில் ஈடுபட்டது மின்துறையில் கேஷியராக பணிபுரியும் மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யோகேசின் வங்கி கணக்கு என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் யோகேசை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜி.எஸ்.டி வரி செலுத்தவேண்டிய ரூ. 55 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக அவருடைய சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் கையாடல் செய்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்ததாகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் செலவழித்ததாக தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News