கோப்பு படம்.
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை
- வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- சம்பவத்தன்று இரவு சரண்யா வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு குழந்தைகளுடன் தூங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வில்லியனூர் அருகே ஆரியபாளையம் சாம்பவி நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பன்னீர்செல்வம் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வார விடுமுறையில் வீட்டுக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு செல்வார். மற்ற நாட்களில் சரண்யா தனது குழந்தைகளுடன் தனியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு சரண்யா வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு குழந்தைகளுடன் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு சரண்யா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்கள் திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்த நிலையில் அதில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கபட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.5லட்சம் ஆகும்.
இதுகுறித்து சரண்யா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.