புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு துறைகளை ரங்கசாமி மூடுவிழா நடத்துகிறார்-வைத்திலிங்கம் எம்.பி.

Published On 2022-10-07 09:24 GMT   |   Update On 2022-10-07 09:24 GMT
  • மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
  • புதுவை மின்துறையை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பதாக கூறியுள்ளனர். இது வரை இந்தியாவில் எங்கும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை.

புதுச்சேரி:

வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த வாரம் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மின்துறை ஊழியர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்துள்ளனர். இதில் அரசின் நிலைப்பாடு என்ன? ஊழியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினை மட்டுமல்லாது, இது பொதுமக்களின் பிரச்சினையும் ஆகும்.

புதுவை மின்துறையை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பதாக கூறியுள்ளனர். இது வரை இந்தியாவில் எங்கும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் தெளிவான நிலையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

5 லட்சத்து 90 ஆயிரம் கட்டினால்தான் அதன் விளக்கத்தை பெற முடியும் என கூறுகிறார்கள். எனவே, எந்த நிபந்தனையோடு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது என்பதனை மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்.

டென்டரில் மின்துறை இடங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1 க்கு கொடுத்துள்ளனர். இதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் முழுமையாக எதிர்க்கிறோம். துறை அமைச்சர், முதல்- அமைச்சர், கவர்னர் ஆகியோரின் துணையுடன் தான் இது நடைபெறுகிறது. அவர்களின் நண்பர்களுக்கு ஏற்றார்போல விதிகளை மாற்றி அமைத்துள்ளனர்.

மதுபான தொழிற்சாலை, மின்துறை தனியார் மயமாக்கல் ஆகிய இரண்டிற்கும் அரசு மக்களுக்கு பதில் கூற வேண்டும். தனியார் மயத்தை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.

ரங்கசாமி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அரசு துறைகளுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார். இப்போது மின்துறையை மூடிவிட்டு தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கொள்கை முடிவு எடுப்பது மட்டும் அரசின் கடமை அல்ல. அதற்கு மக்களிடம் விளக்கம் கொடுத்து, மக்களின் ஒத்துழைப்புடன் முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News