புதுச்சேரி

புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்த தமிழைத் தேடி எழுச்சியில் ராமதாஸ் பேசிய காட்சி

புதுவையில் தமிழில் பிற மொழி கலப்பு அதிகம் இல்லை- ராமதாஸ் பாராட்டு

Published On 2023-02-23 08:15 GMT   |   Update On 2023-02-23 08:15 GMT
  • தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை.
  • பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள்.

புதுச்சேரி:

அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழைக் காப்பதற்காக டாக்டர் ராமதாஸ் 8 நாள் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் 3-ம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே. மணி தலைமை தாங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பொறுப்பாளரும் பா.ம.க. மாநில அமைப்பாளருமான கணபதி வரவேற்றார்.

சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், அதற்காக புதுவை தமிழ் அறிஞர்களை பாராட்டுகிறேன். புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை படிக்கும்போது நமக்கு உத்வேகம் வரும், அதுபோல் பாரதியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களது பொய் வழக்குகளால் அவர் 10 ஆண்டு காலம் புதுவையில் தங்கியிருந்தார்.

அப்போதுதான் குயில்பாட்டு, பெண் விடுதலை பாடல்கள் ஆகியவற்றை பாடினார். பாரதியார் சுதந்திர பற்றை வளர்த்தார்.

பாரதிதாசன் தமிழ் பற்றை வளர்த்தார். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.

திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சால் தேங்க்யூ அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்துவிடுங்கள்.

பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டுங்கள் அதற்கு பிறகும் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேலு, ஜெயக்குமார், மதியழகன், பிரபாகரன் தேவமணி, புதுவை தமிழ் சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், புதுவை தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னனி துரை மாலிறையன், தனித்தமிழ் கழக சீனு அரிமாப் பாண்டியன், தனித்தமிழியக்கம் தமிழ்மல்லன், தமிழர் தேசிய முன்னனி தமிழ்மணி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பூங்கொடி பராங்குசம் , பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி கலைமாமணி ராசன் பாவலர் பயிற்சி பட்டறை இலக்கியன், என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Tags:    

Similar News