புதுச்சேரி

மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

பஸ் மோதியதில் மாடு சாவு பொதுமக்கள் மறியல்

Published On 2022-09-03 14:34 IST   |   Update On 2022-09-03 14:34:00 IST
  • மதகடிப்பட்டில் தனியார் பஸ் மோதியதில் மாடு இறந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • மதகடிப்பட்டு-திருக்கனூர் சாலையை மாடுகள் கடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேமாக வந்த தனியார் பஸ் திடீரென ஒரு மாடு மீது மோதியது.

புதுச்சேரி:

மதகடிப்பட்டில் தனியார் பஸ் மோதியதில் மாடு இறந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம்-திருக்கனூர் சாலையில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி மலர். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

 மலர் மாட்டு கொட்டகையில் இருந்து பசு மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டி சென்றார். மதகடிப்பட்டு-திருக்கனூர் சாலையை மாடுகள் கடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேமாக வந்த தனியார் பஸ் திடீரென ஒரு மாடு மீது மோதியது. இதில் அந்த துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது.

இதனை பார்த்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். உடனே இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆவேசமடைந்து ஒன்று திரண்டனர். அடிக்கடி இப்பகுதியில் இதுபோல் தனியார் பஸ்களால் விபத்து ஏற்படுவதாகவும், இதனால் பல உயிரிழப்பு நடப்பதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும், இறந்த மாட்டின் உரிமையா ளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News