கோப்பு படம்.
ஆதிதிராவிடர்களுகான சலுகைகளை உயர்த்த வேண்டும்-அமைச்சரிடம் வலியுறுத்தல்
- மார்ச் மாதத்தில் நடக்கும் முழு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதி திராவிட மக்களுக்கு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
- அரசு மாணவ- மாணவியர் விடுதிகளில் இறைச்சிகள் கறி, மீன், முட்டை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பு தலைவர் ரோக. அருள்தாஸ் தலைமையில் பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவத் தலைவர் திருமால், நகரத்தலைவர் ஆதிகேசவன், நகரச் செயலாளர் முனியன், அமைப்புச்செயலாளர் பொன்னிவேல், துணை பொதுசெயலாளர் தனவேலு, கொள்கை பரப்பு செயலர் பரமசிவம், செய்தி தொடர்பாளர் கன்னி யப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதத்தில் நடக்கும் முழு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதி திராவிட மக்களுக்கு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும். தற்போது உள்ள திட்ட நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வீடு கட்டும் திட்டம், ஈமச்சடங்கு, பாலூட்டும் தாய்மார்கள், தொடர் நோய் உள்ளவர்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். இலவச மனை பட்டா வழங்க வேண்டும்.
சிறப்பு கூறு நிதியிலிருந்து 22 துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை ஆதிதிராவிட மக்களுக்கு செய்யப்பட்டுள்ளதா? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை எதிரில் அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும். பாட்கோ மூலம் கடன் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்? என்பதை விளக்க வேண்டும்.
அரசு மாணவ- மாணவியர் விடுதிகளில் இறைச்சிகள் கறி, மீன், முட்டை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசு நிறுவனமான பிஸ்கோ மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் முறைகேடு நடக்காமல் தனியாரிடம் டெண்டர் விடுவதை தவிர்க்க வேண்டும்.
வில்லியனூர், லாஸ்பேட்டை ணயில் உள்ள விடுதிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த விடுதிகளை பராமரித்து புதுப்பிக்க வேண்டும். மேலும் திருக்கனூர், கதிர்காமம், ஏம்பலம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், போன்ற புதிய பகுதிகளில் விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.