கோப்பு படம்.
சென்டாக் மாணவர்களிடம் கட்டணம் செலுத்த தனியார் கல்லூரிகள் நிர்பந்தம்
- வையாபுரி மணிகண்டன் புகார்
- உண்மையில் மாநில மாணவர்களும், பெற்றோர் களும் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் மூலம் மருத்துவம், பொறியியல் உள்பட உயர்படிப்புகளில் சேர்ந்த மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணத்தை செலுத்தும்படி நிர்பந்தம் செய்து வருகின்றனர்.
ஆனால், தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணம் கேட்டு நெருக்கடி தரக்கூடாது என அறிவுறுத்தி யுள்ளோம் என முதல்-அமைச்சர் பேசி வருகிறார்.
உண்மையில் மாநில மாணவர்களும், பெற்றோர்களும் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்டாக் நிர்வாகம் மூலம் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரியை காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு இணைக்கவில்லை. இதனால் மாநிலத்தை சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சீட் கிடைத்தும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல. அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கும் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தப்படும் என முதல்- அமைச்சர் அறிவிக்க வேண்டும். மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் கட்டணம் கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.